கடந்த டிசம்பர் 4 அன்று மிக்ஜாம் புயல் எதிரொலியாக எதிர்பாராத விதமாக 56 செ.மீ அளவுக்கு பெருமழை பெய்து சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகின. திமுக அரசு முன்னேற்பாடாக செய்திருந்த வெள்ளவடிநீர் திட்டங்களினால் மறுநாளே நகரத்தின் முக்கியப் பகுதிகளில் பெறுமளவு நீர் வடிந்துவிட்டதெனினும் தாழ்வான புறநகர் பகுதிகள் சிறிது சேதத்தை சந்தித்தன. இன்றைக்கு அனைத்து பகுதிகளுமே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன.
காலம் தாழ்த்தாமல் உடனடியாக வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ரூ.6000 உதவித்தொகையாக அறிவித்தார் முதல்வர் அவர்கள். இந்த உதவித் தொகை எந்தெந்த பகுதிகளுக்கு, யாராருக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் எழுந்த நிலையில் சென்னையில் நியாயவிலைக் கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த உதவித்தொகை பணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர்.
அது மட்டுமல்லாமல் வெள்ள பாதிப்பால் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5லட்சம், சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8ஆயிரம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம், பல்லாண்டு பயிர்கள், மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500, மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500, எருது, பசு போன்ற விலங்குகளின் உயிரழப்புக்களுக்கு ரூ.37,500, ஆடு உயிரழப்புக்கு ரூ.4 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு கட்டுமரங்கள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.50 ஆயிரமும், பகுதியளவு சேதத்திற்கு ரூ.15 ஆயிரமும், வல்லம் வகைபடகுகளின் சேதத்திற்கு 1 லட்ச ரூபாயும், இயந்திரப் படகுகளுக்கான இழப்பீடாக ரூ.7.5 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய 1 கோடி 90 லட்சமும், கல்லூரிகளை சுத்தம் செய்ய 1 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை இன்னும் பத்து நாட்களுக்குள் எல்லோருக்கும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா தரப்பு மக்களையும் மனதிற்கொண்டு விரைவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வெள்ளநிவாரண உதவித்தொகைக்கு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.