இந்திய மாநிலங்களுக்கான வரி வருவாயை குறைக்க நிதி ஆணையத்தை நிர்பந்தித்தார் பிரதமர் மோடி.
2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமரான உடனேயே, மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கணிசமாகக் குறைக்க இந்திய நிதி ஆணையத்துடன் [Finance Commission] மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆயினும், ஒன்றிய வரிகளிலிருந்து மாநிலங்களின் பங்குகளை நிர்ணயம் செய்யும் சுயாதீன அரசியல்சாசன அமைப்பான ஆணையத்தின் தலைவர் எதிர்த்தார். இதனால் மோடி பின்வாங்கினார் என்று புதிய செய்திகள் காட்டுகின்றன.
நிதி ஆணையத்தின் உறுதியான நிலைப்பாடு, மோடி அரசாங்கம் தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையை அவசரமாக 48 மணி நேரத்தில் சரிசெய்யக் கட்டாயப்படுத்தியது. ஒன்றிய வரிகளில் பெரும்பகுதியைத் தக்க வைத்துக் கொள்ள, நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தது. அதே நேரத்தில், மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய வரிப் பங்குகள் குறித்த நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை வரவேற்பதாக மோடி நாடாளுமன்றத்தில் பொய்யாக நடித்தார்.
ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதில் நிதி பேரங்களும் திரைக்குப் பின்னால் சூழ்ச்சிகளும் குறித்த இந்தச் செய்திகளை நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக, மோடிக்கும் நிதி ஆணையத்தின் தலைவர் ஒய்.வி.ரெட்டிக்கும் இடையிலான ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களில் ஒருவராக இருந்தார்.
இப்போதைய இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அரசாங்க அதிகாரி ஒருவர், பிரதமரும் அவரது அமைச்சரவைக் குழுவும் ஆரம்பத்திலிருந்தே மாநிலங்களின் நிதிகளை கசக்கிப் பிழியப் பார்க்க முயற்சித்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும். மாநில நிதி ஒதுக்கீடு செய்வதில் பராபட்சம் காட்டப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை இப்போது மாநிலங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றன.
கடந்த ஆண்டு அரசு சாரா சிந்தனைக் குழுவான Centre for Social and Economic Progress (CSEP) ஏற்பாடு செய்திருந்த இந்தியாவில் நிதி அறிக்கை குறித்த கருத்தரங்கில் பேசியபோது சுப்பிரமணியம் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
தனது கருத்துக்களில் – அரசாங்க அதிகாரி ஒருவரின் மற்றொரு முதல் கருத்து என்ற வகையில் – அவர் எவ்வாறு ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கைகள் “உண்மையை மறைக்கும் தொடர் முயற்சிகளாக உள்ளன” என்பதை வெளிப்படுத்தினார். “[இந்திய அரசாங்கத்தின்] கணக்கு அறிக்கைகள் பொதுவெளியில் இருந்தால், அவை ஹிண்டன்பர்க் அறிக்கையைப் போல இருக்கும் என்பது உறுதி” என்று அவர் மேலும் கூறினார்.
அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய கணக்கு வழக்கு மோசடி நடைமுறைகளை கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் எவ்வாறு வெளிப்படுத்தியதோ, அதேபோல இந்திய அரசாங்க கணக்கு அறிக்கைகள் வெளிப்படையானதாக இருந்தால், அரசாங்கத்தின் நிதி நிலைமை பற்றிய உண்மை தெளிவாகத் தெரியும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான அதானியின் கணக்கு வழக்கு மோசடியும் பிற சிக்கல்களும் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றிய ஹிண்டன்பர்க் மதிப்பீடு, 132 பில்லியன் டாலர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. விமான நிலையம் நடத்துவது முதல் சமையல் எண்ணெய் விற்பது வரை எல்லா தொழிகளையும் செய்யும் அதானி குழுமம் மோடி அரசாங்கத்திற்கு நெருக்கமானது எனக் கருதப்படுகிறது. இதனால் இந்த விசயம் அரசியலில் புயலைக் கிளப்பிய விவாதமாக ஆனது.
நிதி நிலை அறிக்கைகள் பற்றியும் பிற ஆவணங்கள் பற்றியும் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறியவற்றை ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ சுதந்திரமாகச் சரிபார்த்தது.
அக்கருத்தரங்கில் பேசும்போது ஒரு கட்டத்தில், அரசு நிதியுதவி பெற்ற உள்கட்டமைப்பு திட்டத்தில் நிதி கையாடல் மோசடி பற்றிய விவரங்களை சுப்பிரமணியம் வெளியிட்டார். அதை ஒரு “வேடிக்கையான நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டார்.
அவரது கட்டுரை தலைப்பு சிறப்பாக இருந்தபோதிலும், கருத்தரங்கின் யூடியூப் லைவ்ஸ்ட்ரீம் 500க்கும் அதிகமான பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ விரிவான கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, CSEP யூடியூப் சேனலிலிருந்து அக்கருத்தரங்கின் வீடியோவுக்கான அணுகல் துண்டிக்கப்பட்டது.
சுப்பிரமணியம், நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியோர் ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ கேட்ட விரிவான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
நிதி ஆணைய ஊழல்
இந்தியாவின் அரசியலமைப்பின்படி, பொருளாதார வல்லுநர்களையும் பொது நிதியியல் நிபுணர்களையும் கொண்ட சுதந்திரமான நிறுவனம் நிதி ஆணையம் (Finance Commission). இந்த ஆணையமே “செஸ்” அல்லது “கூடுதல் கட்டணங்கள்” என்று வகைப்படுத்தியவற்றைத் தவிர்த்து, ஒன்றிய அரசாங்கம் வரி வருவாய்களிலிருந்து மாநிலங்களுடன் எவ்வளவு சதவிகிதம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது.
14ஆவது நிதி ஆணையம் 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதே நேரத்தில், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒன்றிய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவிகித பங்கை வழங்குமாறு ஆணையத்தைக் கேட்டதற்காகச் செய்திகளில் இடம்பிடித்தார்.
டிசம்பர் 2014 இல் சமர்ப்பித்த நிதி ஆணைய அறிக்கையில், ஒன்றிய வரிகளில் 32 சதவிகிதம் பெற்று வந்த மாநிலங்கள் 42 சதவிகிதத்தைப் பெற வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால் அப்போது பிரதமரான மோடியும், அவரது நிதி அமைச்சகமும் நிதி ஆணையத்தின் பரிந்துரையை அப்படியே ஏற்கவில்லை. மாநிலங்களின் வரிப் பங்கை 33 சதவிகிதமாகக் குறைத்து வழங்கி, ஒன்றிய அரசே பெரும் பகுதியைத் தக்கவைத்திருக்கவும் விரும்பினர்.
அரசியலமைப்பு விதிகளின்படி, அரசாங்கத்திற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன: நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரித்து புதிய ஆணையத்தை நிறுவுவது. அதனுடன் முறையாகவோ அல்லது முறைசாராமலோ வாதிடவோ, விவாதிக்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ முடியாது.
ஆனால், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த நிதி ஆணையத் தலைவர் ஒய்.வி.ரெட்டி அவர்களிடம் வருவாய் பங்கு குறித்த பரிந்துரைகளை மாற்றித் தருமாறு பிரதமர் வலியுறுத்த முயன்றார். அந்த உரையாடலில் தான் மட்டுமே இருந்தேன் என்று சுப்பிரமணியம் கூறியிருந்தார்.
இது அரசியல் சாசன நெறிமுறைகளை மீறிய செயல் ஆகும். மோடி அரசாங்கம் நிதி ஆணையப் பரிந்துரையை மாற்றி அமைப்பதில் வெற்றி பெற்றிருந்தால், மாநிலங்களின் வருமானப் பங்கைக் குறைத்திருக்க முடியும். அதே நேரத்தில் பழியை அரசியல்சாசன அமைப்பான நிதி ஆணையத்தின் மீது தூக்கிப் போட்டிருக்க முடியும்.
சுப்பிரமணியம் கூறுகையில், “இந்த பரிந்துரை விகிதம் குறித்து டாக்டர் ரெட்டியும், நானும் பிரதமரும் விவாதித்தோம்” என்று கூறினார்.
“நிதி அமைச்சகமும் [அதிகாரி அல்லது அமைச்சர்],” இப்பேச்சுவார்த்தையில் சம்பந்தப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார். “இது 42 [சதவிகிதம்] அல்லது 32 [சதவிகிதம்] அல்லது இடையில் ஏதாவது விகிதமாக இருக்க வேண்டுமா? “என்று கேட்டார். 13 வது நிதி ஆணையம் பரிந்துரையே 32 சதவிகிதம்.
இந்த உரையாடல் இரண்டு மணி நேரம் நீடித்தது. ஆனால் ரெட்டி விட்டுக்கொடுக்கவில்லை. சுப்பிரமணியம் ரெட்டியிடம் “நல்ல தென்னிந்திய ஆங்கிலத்தில்: ‘அப்பா [சகோதர], போய் உங்கள் முதலாளியிடம் (பிரதமரிடம்) அவருக்கு வேறு வழியில்லை என்று சொல்லுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.
நிதிக்குழுவின் 42 சதவிகித பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்.
அறிக்கையை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதை மாற்றுவது குறித்த உரையாடல்கள் நடந்ததாகவும் 14 வது நிதி ஆணையத்தின் ஒரு பகுதியாக இருந்த அதிகாரி ஒருவரிடமிருந்து ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் உறுதிப்படுத்தியது. அந்த நேரத்தில் அரசாங்கத்திற்காக வேலை செய்து கொண்டிருந்த, இதுபற்றி அறிந்திருந்த மற்றொரு பொருளாதார நிபுணரிடம் நாங்கள் அதை உறுதிப்படுத்தினோம்.
“அறிக்கையை நிராகரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதை மாற்றுமாறு கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஆணையத்தின் முக்கிய அறிக்கையை நிராகரித்துள்ளது. அப்போதும் கூட அது அறிக்கையின் ஒரு பகுதி பற்றிய குறிப்புடன் நிராகரித்தது. அப்போதும் ஒன்றிய அரசாங்கம் வருவாய் பகிர்வு குறித்த தன் கருத்தை முன்வைக்கவில்லை” என்று பொருளாதார நிபுணர் கூறினார். பிரதமர் அலுவலகம் சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்பதால், தன் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.
ஆனால், நாடாளுமன்றத்தில், மாநிலங்களின் வருவாய் பங்கைக் குறைக்கும் தனது அரசாங்கத்தின் முயற்சி தோல்வியுற்றதை மோடி மூடிமறைத்தார். 2015 பிப்ரவரி 27 அன்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்: “தேசத்தை வலுப்படுத்த, நாம் மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும்… நிதிக்குழு உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் மாநிலங்கள் வளப்படுத்தப்பட வேண்டும், வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்கள் உறுதிப்பாடு. அவர்களுக்கு 42 சதவிகித பகிர்வு வழங்கினோம்.
மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் சிரித்துக் கொண்டும் கைதட்டியும் வரவேற்க, “சில மாநிலங்களில் இவ்வளவு பணத்தையும் வைத்திருக்கும் அளவுக்கு பெரிய கருவூலங்கள்கூட இருக்காது” என்று அவர் மேலும் கூறினார். ஆனால் வரி வருவாயில் ஒரு சிறிய பகுதியுடன், அரசாங்கம் முழு வரவு செலவுத் திட்டத்தையும் மறுசீரமைக்க வேண்டியிருந்தது. இதனால் பல நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைத் துண்டித்தது.
“அந்த ஆண்டு இரண்டு நாட்களில் பட்ஜெட் எழுதப்பட்டது. இந்தப் பரிந்துரை ரொம்ப லேட்டா வந்ததால ரெண்டு நாள்தான் இருந்துச்சு, முன்னமே பட்ஜெட் எல்லாமே எழுதி இருந்துச்சு… நிதி ஆயோக்கில் ஒரு மாநாட்டு அறையில். நாங்கள் நான்கு பேர் உட்கார்ந்து முழு பட்ஜெட்டையும் மாற்றியமைத்தோம்” என்று சுப்பிரமணியம் நினைவு கூர்ந்தார்.
“நாங்க வெட்டினது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு… பெண்களுக்கும் குழந்தைகளும் – மாநிலப் பட்டியல் – 36,000 கோடி. அதை 18,000 கோடியாக ஆக்கினோம்” என்று அவர் தனது உரையில் கூறினார். அவரும் மற்ற மூன்று பெயரிடப்படாத அதிகாரிகளும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துணவு வழங்குவது போன்ற நலத்திட்டங்களை நடத்தும் ஒன்றிய பெண்கள் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக ஒதுக்கீட்டை 360 பில்லியன் ரூபாயில் இருந்து 180 பில்லியன் ரூபாய் (2.9 பில்லியன் டாலர்) வரை எவ்வாறு பாதியாகக் குறைத்தனர் என்பதை விவரித்தார்.
அவர் கூறிய புள்ளிவிவரங்கள் துல்லியமானவை அல்ல என்றாலும், 2015 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகளை 211 பில்லியன் ரூபாயில் (3.4 பில்லியன் டாலர்) இருந்து அடுத்த ஆண்டு 102 பில்லியன் ரூபாயாக (1.6 பில்லியன் டாலர்) அரசாங்கம் கணிசமாக குறைத்தது.
அந்த வரவுசெலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு முந்தைய ஆண்டை விட 18.4 சதவிகிதம் வெட்டப்பட்டதையும் காணமுடிகிறது.
‘உண்மையை மறைக்க முயற்சி’
சுப்பிரமணியத்தின் வெளிப்படையான கருத்துக்கள் பலவற்றைத் தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அரசு அதிகாரிகள், குறிப்பாக மோடி நிர்வாகத்தில் உள்ள அரசு அதிகாரிகள், இவ்வாறு வெளிப்படையாகப் பேச முன்வருவது மிகவும் அரிது.
நிதி வெளிப்படைத்தன்மை குறித்த குழுவில் பேசிய சுப்பிரமணியம், நாட்டின் கணக்குகளை ஆராய ஒரு “ஹிண்டன்பர்க்” நிறுவனம் தேவைப்படும் என்றார். அதை ஏற்றுக்கொண்ட கருத்தரங்க அறை சிரிப்பலையில் மிதந்தது.
ஒன்றிய நிதிநிலை அறிக்கை “உண்மையை மறைக்கும் அடுக்கடுக்கான முயற்சி” என்று அவர் கூறினார். ஜேபி மோர்கன், சிட்டி வங்கி போன்றவை நிதி நிலை அறிக்கை குறித்து செய்த பகுப்பாய்வு “மெய்யான நிலைமை என்ன என்பதில் உண்மையை வெளிப்படுத்துகிறது” என்று அவர் கூறினார். வெளிநாட்டு வங்கிகளும் முதலீட்டாளர்களும் இந்திய அரசாங்கத்தின் கணக்குகள் குறித்த பகுப்பாய்வுகளில் உள்நாட்டுகாரர்களைவிட எவ்வாறு நேர்மையாக இருக்கிறார்கள் என்பதையும் விளக்கினார்.
மத்திய – மாநில அரசாங்கங்களின் வரவுசெலவுத் திட்டங்கள் நம்பத்தகாதவை என்று சுப்பிரமணியம் கூறினார். ஏனெனில் இரு மட்டங்களிலும் உள்ள அரசாங்கங்கள் கடன் அளவுகளை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக கணக்கு வழக்கு தந்திரங்களையும் சில நேரங்களில் அப்பட்டமான மோசடியையும் செய்கின்றன என்று கூறினார்.
உள்நாட்டு – வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முக்கிய கவலைகளில் ஒன்று, எந்த நேரத்திலும் அரசாங்கம் சுமக்கும் நிதிப் பற்றாக்குறையின் அளவு. வரி மற்றும் பிற வருவாய்களிலிருந்து சம்பாதிப்பதை விட, அரசாங்கம் கடன்கள் மூலம் அதிகமாகச் செலவிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கத்தின் சக்திக்கு மீறிய செலவிடுதல். நிதிப் பற்றாக்குறையின் ஆரோக்கியமற்ற நிலைகள் முதலீட்டாளர்களை பயமுறுத்துகின்றன. பொருளாதாரத்தில் எதிர்மறையான தொடர் விளைவுக்கு வழிவகுக்கும்.
எனவே, அரசாங்கங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க கணக்கு வழக்கு தந்திரங்களைக் கையாளுகின்றன. கடன்களை நிதிநிலை அறிக்கைகளிலிருந்து மறைத்து விடலாம்; “நிதிநிலை அறிக்கை சாராத கடன்” என்று அழைக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் அனைத்து வகையான இந்திய அரசாங்கங்களும் இதைச் செய்ததற்காக விமர்சிக்கப்பட்டுள்ளன. எளிமையாகச் சொன்னால், இவை பொதுவாக அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களால் வாங்கப்படும் கடன்கள். அவை அரசாங்க கணக்கு அறிக்கைகளில் தெரிவிக்கப்படுவதில்லை. இருப்பினும், இறுதியில் இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டியது அரசாங்கம்தான்.
மத்திய அரசு தனது 2019-20 நிதியாண்டு பட்ஜெட்டில், இதுபோன்ற பட்ஜெட் அல்லாத கடன்கள் அனைத்தையும் வெளியிடுவதாக அறிவித்தது. இதுபோன்ற கடன் அதிகரிப்புக்கு எதிராக 15 வது நிதிக்குழு விமர்சனம் செய்ததை அடுத்து இம்முடிவுக்கு வந்தது.
ஒன்றிய அரசாங்கம் அதுவரை இருந்ததைக் காட்டிலும் நன்றாக அறிக்கை வெளியிட்டது. ஆனால் அது போதுமானதாக இல்லை என்று சுப்பிரமணியம் ஒப்புக்கொண்டார்.
கூடுதல் நிதிநிலை வளங்கள் குறித்த அரசாங்கத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டு, “இது ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறது” என்று அவர் உரையில் சுட்டிக்காட்டினார். “கடன் வாங்கும் நேரம், கடன் வாங்கும் தொகை, கடன் வாங்கும் காலக்கெடு, வட்டி விகிதம் என்ன? எதுவுமே தெரியாது.”
நாட்டின் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் மத்திய அரசின் நிதி குறித்த அறிக்கை, 2022 ஆம் ஆண்டில் இந்த குறைபாடுகளில் சிலவற்றை அம்பலப்படுத்தியது. உதாரணமாக, அரசாங்கத்திற்கு சொந்தமான பல்வேறு அமைப்புகளால் திரட்டப்பட்ட 1.69 டிரில்லியன் ரூபாய்க்கும் (21.9 பில்லியன் டாலர்) அதிகமான தொகையை அது வெளியிடவில்லை. இது கூடுதல் நிதிநிலை வளங்கள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
தனது உரையில், முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தபோது அரசு நிதியுதவி பெற்ற உள்கட்டமைப்பு திட்டத்தில் நடந்த நிதி முறைகேடு குறித்தும் சுப்பிரமணியம் ஆராய்ந்துள்ளார்.
“ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது” என்று கூறிய அவர், அந்த நேரத்தில் மத்திய பாஜக அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் எவ்வாறு “போலி நிதி சான்றிதழை” சமர்ப்பித்தது என்பதை விவரித்தார். இது நிதிப் பயன்பாட்டுச் சான்றிதழ்களைக் குறிக்கிறது. இது நிதி வழங்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும்.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தவணைதவணையாக நிதியை விடுவிக்கிறது. முந்தைய தவணையை சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதற்கான சான்றிதழை அரசு அனுப்பிய பிறகு ஒவ்வொரு அடுத்தடுத்த தவணைக்கான பணமும் விடுவிக்கப்படும்.
“இரண்டாவது தவணை வந்தது. முதல் தவணை எடுத்த ஒப்பந்ததாரருக்கு எப்படி பணம் செலவு செய்வது என்று தெரியவில்லை. ஏனெனில், முதல் தவணை முழங்கிவிட்டார். இரண்டாவது தவணையும் வந்துவிட்டது” என்று அவர் மேலும் கூறினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமர்ப்பிக்கப்பட்ட போலி பயன்பாட்டு சான்றிதழின் அடிப்படையில், மத்திய அரசு இரண்டாவது தவணை நிதியை விடுவித்தது. ஆனால் இப்போது, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சிக்கலில் சிக்கியுள்ளது. இது முதல் தவணை நிதியை தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், ஒப்பந்தக்காரருக்கு அடுத்த தவணையை விடுவிக்க முடியவில்லை.
இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்த விரிவான கேள்விகளுக்கு சுப்பிரமணியம், நிதி அமைச்சகம் ஆகியோரிடமிருந்து ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பதிலைப் பெறமுடியவில்லை.
கூடுதல் கட்டணங்கள் (செஸ்) என்னும் புதைகுழி
நிதி ஆணையம் தனது அறிக்கையை மாற்றச் செய்வதன் மூலம் மாநிலத்தின் வரிப் பங்கைக் குறைக்க முடியாது என்று மோடி அரசாங்கம் கண்டறிந்தவுடன், இன்றுவரை நீடிக்கும் பழைய கணக்குச் சூழ்ச்சியைப் பயன்படுத்தியது. ஒன்றிய அரசு செஸ் – கூடுதல் வரி எனப்படும் ஒருவகை வரிகளின் வசூலை படிப்படியாக அதிகரித்தது. இதில் எந்தப் பகுதியையும் பெற மாநிலங்களுக்கு உரிமை இல்லை.
“நிதியை அல்லது வருவாயை அதிகரிக்க செஸ் – கூடுதல் கட்டணங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது” என்று சுப்பிரமணியம் தனது உரையில் கூறினார்.
நரேந்திர மோடியின் ஆட்சியில் ஒன்றிய அரசு வசூலித்த செஸ் – கூடுதல் கட்டணங்களின் அளவு 2015 முதல் அதிகரித்துள்ளது என்று தரவு காட்டுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் 2011-12 ஆம் ஆண்டில் வசூலித்த மொத்த வரிகளில் செஸ் – கூடுதல் கட்டணங்களின் பங்கு 10.4 சதவிகிதமாக இருந்தது. 2017-18க்கும் 2021-22க்கும் இடையில், ஒன்றிய அரசாங்கம் வசூலித்த மொத்த செஸ் – கூடுதல் கட்டணம் 2.66 டிரில்லியன் ரூபாயிலிருந்து (33.7 பில்லியன் டாலர்) இருந்து 4.99 டிரில்லியன் ரூபாயாக (64.8 பில்லியன் டாலர்) இரு மடங்காக அதிகரித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில், மொத்த வரி வருவாயில் ஒரு பங்காக செஸ் – கூடுதல் கட்டணங்கள் 13.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக உயர்ந்தன.
Centre for Budget and Governance Accountability என்ற சுயேச்சையான சிந்தனைக் குழுவைச் சேர்ந்த மாலினி சக்ரவர்த்தி, மாநிலங்களின் நிதியைக் களவாட பாஜக அரசாங்கம் பயன்படுத்திய தந்திரங்களைப் பற்றி எழுதுகிறார்: “2017-18 வரவு-செலவுத் திட்டத்தில், ஒன்றிய அரசாங்கம் 500,000 ரூபாய் வரையிலான வருமான வரி விகிதத்தை 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்தது. இதன் விளைவாக ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ .5 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்திற்கு [$74,600] கூடுதல் கட்டணம் விதித்தது. இதேபோல், 2018-19 பட்ஜெட்டில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .9 [0.12 டாலர்] குறைக்கப்பட்டாலும், அதற்கு சமமான தொகையைச் சாலை செஸ்ஸில் அதிகரித்தது.
செஸ் – கூடுதல் கட்டணங்களின் அதிகரிப்பு குறித்து குறிப்பிடுகையில், சுப்பிரமணியம் கூறினார்: “எனவே, பிரிக்க முடியாத வருவாய்த் தொகுப்பின் பகுதியாக உள்ள செஸ் – கூடுதல் கட்டணங்கள் அதிகரித்துக்கொண்டே சென்றால், மாநிலங்கள் நிதி சுயாட்சியை மென்மேலும் இழக்கும்.”
மோடி அரசாங்கம் மாநிலத்தின் வரி ஆதாரங்களை அரித்த ஒரு வழி, பல வருட அரசியல் பேரங்களுக்குப் பிறகு ஜூலை 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகும். இது ஒரு ஒற்றை சந்தையை உருவாக்குவதாகக் கொண்டுவரப்பட்ட வரிமுறை எனக் கருதப்பட்டது. ஏராளமான உள்ளூர் வரிகளுக்குப் பதிலாக தேசிய வரி முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வரிமுறையால் “மாநிலங்கள் மென்மேலும் வருவாய் இழப்பைச் சந்திக்கின்றன” என்று சுப்பிரமணியம் கூறினார். இக்கூற்று, முன்பு எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசாங்கங்கள் எழுப்பிய கவலையை நியாயமானது என உணர்த்துகிறது.
ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது ஜிஎஸ்டிக்கு பிந்தைய மாநில வரி வருவாய் குறைந்துள்ளது என்று அண்மைக் கால ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
National Institute of Public Finance and Policy நிறுவன ஆராய்ச்சியாளர்களின் 2023 ஜனவரி ஆய்வறிக்கை மாநில வருவாயைப் பகுப்பாய்வு செய்தது. அவர்கள் மதிப்பாய்வு செய்த 18 மாநிலங்களில் 17 மாநிலங்களில், ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது ஜிஎஸ்டிக்கு பிந்தைய காலகட்டத்தில் மாநில அளவிலான வரிகள் மூலம் மாநிலங்கள் உருவாக்கிய வருவாய் குறைந்துள்ளது.
மாநிலங்களின் நிதி சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒன்றிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஒருபகுதியாக 2017ஆம் ஆண்டில் 15வது நிதி ஆணையம் “இலவச [மக்கள்நல]த் திட்டங்களை” தவிர்க்க்கும் மாநிலங்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்கப் பரிந்துரைத்தன.
இதேபோல், 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் “ரெவ்டி கலாச்சாரம்” தலைவிரித்தாடுவதாகவும், நலத்திட்டங்களை வழங்குவதன் மூலம் மக்களுக்கு இலஞ்சம் கொடுப்பதாகவும் மோடி குற்றம் சாட்டி வருகிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் குறித்த நிதி ஆணையத்தின் கருத்துக்களில், மேலதிகாரியுடன் சுப்பிரமணியம் மாறுபடுகிறார்.
“கேள்வி என்னவென்றால், நலத்திட்டங்கள் சமூகத் தேவைகள். அமெரிக்காவில் மெடிகேர், மெடிக்எய்ட் ஆகியவற்றை இலவசங்கள் என்று யாராவது சொல்லலாம். ஆனால் அவற்றை நிறுத்திவிட முடியுமா?” என்று கேட்டார். “அவை சமூகத் தேவைகள் என்று நான் நினைக்கிறேன். அவை பொருளாதார முடிவுகள் அல்ல. நீங்கள் செலவு செய்ய முடியுமா, இல்லையா என்பதை மட்டுமே பொருளாதாரம் தீர்மானிக்கலாம். அது சரி, தவறு என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது ஒரு அரசியல்.”
இக்கட்டுரையை எழுதிய ஸ்ரீகிரீஷ் ஜலிஹால், நிதின் சேத்தி ஆகியோர் லாப நோக்கற்ற புலனாய்வு இதழியல் அமைப்பான தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் உறுப்பினர்கள்.
Aljazeera article : As PM, India’s Modi secretly tried to massively cut state Funds