மாநில முதல்வரே பல்கலைக்கழக வேந்தர்!!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.ஜெகந்நாதன் ஊழல் மற்றும் முறைகேடுகள் புகாரில் நேற்றைக்கு (26-12-2023) கைது செய்யப்பட்டு இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக அவர் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. 2018ல் நடைபெற்ற தணிக்கையில் சுமார் 47 கோடி ரூபாய்க்கு கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், விதிமுறைகளை மீறி ஆசிரியர் சேர்க்கை நடைபெற்றது எனவும், அரசின் அனுமதியின்றி சிலருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது எனவும் கண்டுபிடிக்கப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டன. 2014 முதல் 2017 வரை சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுவாமிநாதன் உட்பட 8 பேர்கள் மேல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது சர்ச்சையில் சிக்கி கைதாகி வெளிவந்திருக்கும் ஜெகந்நாதன் 2021 ஜுலை மாதம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர். இவர் பதவியேற்ற ஒரு வருடத்தில் UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் பட்டப்படிப்பு செல்லாது எனவும், அப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் மாணவர்கள் சேரவேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்தது. முழுநேர இயக்குநர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள் இல்லாததையும் மற்றும் முறையான கல்வி மையங்கள் இல்லாததையும் காரணமாக அறிவித்தது. அது குறித்து அப்போதைய ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் ஆளுநர் தரப்பில் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அதற்கடுத்த மாதமே நடந்த பல்கலைக்கழக தேர்வொன்றில் “தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட ஜாதி எது?” என்ற கேள்வி கேட்கப்பட்டு அதன்பொருட்டு எதிர்ப்பு கிளம்பி அந்த விஷயம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அது தவறுதலாக வெளிகல்லூரி பேராசிரியர்கள் எடுத்த கேள்வி என சமாளித்தனர். அதற்கு மன்னிப்பும் கோரினர். இவ்வாறாக தொடர் சர்ச்சைகளில் அந்த பல்கலைக்கழகம் சிக்கிக் கொள்வதும் அது குறித்தான புகார்கள் ஆளுநரிடம் செல்வதும் அது கிடப்பில் போடப்படுவதுமான வாடிக்கையாகவே தொடர்ந்தது.

ஆளுநரின் அலட்சியப்போக்கினைத் தொடர்ந்து இந்த விஷயத்தை தமிழக அரசு கையில் எடுத்தது. அதன் தொடர்ச்சியாக சேலம் பல்கலைக்கழகத்தின் மேல் கூறப்பட்ட புகார்கள் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க உயர்கல்வித்துறையின் சார்பில் குழு அமைத்தது. பல்கலைக்கழக இயக்குநர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நியமனம் செய்தது, ஆட்சிமன்ற உறுப்பினராக தமிழ்த்துறை தலைவர் பெரியசாமியை விதிகளை மீறி நியமித்தது, சின்டிகேட் உறுப்பினர்கள் நியமனத்தில் விதிமீறல்கள் உள்ளிட்ட 13 புகார்களை விசாரிக்க இக்குழுவிற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை பரிந்துரைத்தது. விசாரணையின் முடிவில் கூறப்பட்ட புகார்கள் மட்டுமல்லாது பல்கலைக்கழக துணைவேந்தரான ஜெகந்நாதனே நேரடியாக ஈடுபட்ட முறைகேடுகள், விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. ஜெகந்நாதன் மீது சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் மற்றும் செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்தார்.

அதென்னவெனில், இரா.ஜெகநாதன், கு.தங்கவேல் பதிவாளர், செ. சதீஷ்- இணை பேராசிரியர் கணிணி அறிவியல் துறை மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ராம்கணேஷ் ஆகியோர் தங்களை இயக்குனர்களாக  கொண்டு தலா 1 லட்சம் முதலீடு (மொத்தம் பங்கு முதலீடு 15 லட்சம்) செய்து Ministry of Corporate  Affairs ல் பதிவு எண். (Reg.No..) 029418, கார்ப்பரேட் அடையாள எண். ((Corporate  Identification Numbers  – CIN)  U85500TZ2023NPL029418 ன்படி கடந்த 14.09.23 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் PUTER Foundation (Periyar University Technology Entrepreneurship and Research  Foundation)  என்ற நிறுவனத்தை PUTER Park, நெய்தல் சாலை,  பெரியார் பல்கலைக்கழக வளாகம் , சேலம் – 636011 என்ற முகவரியிட்டு பதிவு செய்துள்ளதாகவும், மேற்படி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை பாட படிப்புகள்,  சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் கற்றுத்தர உள்ளதாக தெரிகிறது. மேலும் Integrating Artificial Intelligence (AI), Internet of Things (IoT) Augmented Reality/Virtual Reality (AR/VR) technologies, 3D பிரிண்டிங்,  ட்ரோன் தொழில்நுட்பம்,  செயற்கைக்கோள் தொழில்நுட்பம் ஆகிய 7 தொழில் நுட்ப படிப்புகளை மேற்படி நிறுவனத்தில் கற்றுத்தர உள்ளதாகவும், மேற்படி படிப்புகளை பயிற்றுவிக்க பெரியார் பல்கலைக்கழக வளாகத்தையும் அதன் கட்டமைப்பையும் பயன்படுத்தி கொள்வதாகவும்,  மேலும் மேற்படி PUTER  அறக்கட்டளையில் இயக்குநர்களாக உள்ள துணை வேந்தர் உள்ளிட்டவர்கள் பொது ஊழியர்களாக இருந்தும் பல்கலைக்கழத்திலோ அல்லது தமிழக அரசிடமோ இதற்கான அனுமதி பெறவில்லை எனவும் இதனால் அரசை ஏமாற்றுதல் மற்றும் அரசுக்கு நிதி இழப்பினை ஏற்படுத்தியது, துணை வேந்தர் ஜெகநாதன்,  பதிவாளர் தங்கவேல், சதீஸ் – இணை பேரராசிரியர், ராம்கணேஷ் – பேரராசிரியர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்  ஆகியோர் கூட்டு சதி செய்வது குறித்து தான் அரசுக்கு தெரியப்படுத்தியதாகவும் இதன் காரணமாக தன் மீது கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் தங்கவேல் அவர்கள் புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக தனது நண்பர் சக்திவேல் என்பவருடன் 26.12.23 ஆம் தேதி மதியம் சுமார் 1.30 மணிக்கு துணை வேந்தர் அவர்களை நேரில் சந்திக்க சென்றதாகவும், அப்போது அய்யா என் மீது பதிவாளர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் தந்தது குறித்தும், PUTER FOUDATION குறித்தும் பேச வந்துள்ளேன் என்றும் கேட்டதற்கு, உன்னோடு நான் என்ன பேச வேண்டும் உன் ஜாதி புத்தியை காட்டி விட்டாயே என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஜெகந்நாதன் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக “பெரியாரின் போர்க்களங்கள்”, “மெக்காலே : பழமைவாதக் கல்வியின் பகைவன்” ஆகிய நூல்களை எழுதிய இதழியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா.சுப்பிரமணி அவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக் கழகத்தின் அனுமதி பெறாமல் எப்படி நூல்கள் வெளியிடலாம்’ என விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகம். இத்தனைக்கும் இரா.சுப்பிரமணி அவர்கள் பல்கலைக் கழகத்திலுள்ள ‘பெரியார் இருக்கைக்கு’ இயக்குநராகவும் பணியாற்றி வந்தவர். பெரியாரின் பெயரிலேயே அமைந்த பல்கலைக்கழகத்தில் பெரியாரை பற்றிய நூல் எழுதியதற்கு நடவடிக்கை என்றால் பல்கலைக்கழக மேல்மட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு சனாதன அரசியல் சார்புடையதாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகும்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், ஆளுநரின் கைப்பாவையாக செயல்படுவதினால் தான் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்கின்றன. ஆளுநரும் சனாதன சார்பாளர் என்பதாலும் வேந்தர் பதவியை ஒரு கௌரவ பதவியாக கருதி அதற்கான பணிகள் எதையும் சரிவர செய்யாததினாலும் இது போன்ற குற்றங்கள் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தான், இந்த ஆட்சி அமைந்த பிறகு, பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி மீண்டும் அனுப்பியுள்ளது. இதை எதோ திமுக அரசின் எதேச்சதிகாரமான போக்காக, ஆளுநருடன் எதிரி மனோபாவமாக கட்டமைக்க பாஜக பாடுபடுகிறது. ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் முன்னோடி பாஜக ஆளும் குஜராத் மாநிலம் தான். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது குஜராத்தில் இருக்கும் 14 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் அப்போது வேந்தராக இருந்த ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச்சரான தன்னை வேந்தராக நியமித்து சட்டம் இயற்றினார். 2015 இல் பாஜகவைச் சேர்ந்த ஓ.பி.கோலி குஜராத்தின் ஆளுநர் ஆனதும் அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்தார். இப்போது முதலமைச்சர்தான் அங்கே வேந்தராக உள்ளார்.

ஒரு மாநில முதல்வர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் பட்சத்தில், ஆளுநரின் தலையீடு இல்லாமல் மாநில அரசின் உயர்கல்வித்துறை நேரடிப் பார்வையின் கீழ் பல்கலைக்கழகங்கள் இயங்கும் பட்சத்தில் தான் இது போன்ற குற்றச்செயல்கள், விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்க இயலும். அது மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த வழிவகை செய்யும். சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடும் விவகாரத்தில் நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டு வைத்திருக்கும் நிலையில் பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வர் பொறுப்பேற்கும் சட்டமசோதா விரைவில் நிறைவேறினால் மட்டுமே மாணவர்களின் உயர்கல்வித் தரம் உயரும். அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நிறைவேறுவதற்கான காலம் சமீபத்திருக்கிறது.

இனி மாநில முதல்வரே பல்கலைக்கழக வேந்தர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *