அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உத்தரப்பிரதேசத்திலோ அல்லது நாட்டின் பிற பகுதிகளிலோ இராமராஜ்ஜியத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்கிறார் சந்தீப் பாண்டே, சோசலிஸ்ட் கட்சியின் (இந்தியா) பொதுச் செயலாளர்.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள இராமர் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதே இடத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து, ஒழுக்க சீல இந்து கடவுள் இராமனுக்குக் கோயில் கட்டி வருகின்றனர். பாபர் மசூதி இடித்ததைக் கிரிமினல் குற்றம் என்று வருணித்த உச்ச நீதிமன்றமே, இடித்தவர்களுக்குக் கோவில் கட்ட நிலம் வழங்கியது. இப்போது குடமுழக்கை நடத்தி அரசியல் ஆதாயம் தேட விழைக்கின்றனர். ஒரு அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஆளும் கட்சி இந்த அரசியல் விளையாட்டில் முழு அரசாங்க கருவிகளையும் ஈடுபடுத்தியுள்ளது. இந்த அரசியல் நிகழ்வுக்குச் செலவிடப்படும் மக்கள் பணம் சுத்த பைத்தியக்காரத்தனம்.
மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை கடைபிடிக்கும் நாட்டில், கோயில்கள் கட்டுவது எப்போதிருந்து அரசின் வேலையாக மாறியது? பிரதமர் நாட்டின் தலைமை பூசாரியாக வலம் வருகிறார். கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் பார்ப்பன இந்து மதத்தின் ஆணவத்தை கவனியுங்கள். அநேகமாக கடவுளின் சிலைக்கு உயிர் கொடுக்க முடியும் என்று நம்பும் இந்த உலகில் உள்ள ஒரே மதம், இந்து மதம்தான்.
- கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர் தொடங்கப்பட்ட ‘தீபோற்சவ’த்தின் போது அயோத்தியில் 22.23 லட்சம் விளக்குகளை ஏற்றினார். அதற்கு முந்தைய ஆண்டு 17 லட்சம் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்தப் பிரம்மாண்டமான வீண்செலவு, இந்நாட்டு ஏழைகளை, உங்களால் என்ன செய்ய முடியும் என கேலி செய்கிறது. இந்நாட்டு ஏழைகளில் பெரும்பகுதியினர் யோகி ஆளும் உத்தரபிரதேசத்தில்தான் உள்ளனர். அந்த ஏழைகள், விளக்கு ஏற்றிய மறுநாள் காலையில், இந்த விளக்குகளில் மிச்சமுள்ள கடுகு எண்ணெயைச் சேகரித்து சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த விளக்குகளை எரிப்பதன் மூலம் என்ன சாதிக்கப்படுகிறது? முன்பு பல சாதனைகள் செய்திருக்கும்போது, அரசாங்கம் ஏன் உலக சாதனைகள் செய்ய வெறிகொண்டு அலைகிறது? இது பைத்தியக்காரத்தனம் இல்லையென்றால், வேறு எதுதான் பைத்தியக்காரத்தனம்?
- இராமன், லட்சுமணன், சீதை வேடம் போடுவதற்கு தொழில்முறை நடிகர்களுக்கு ஆதித்யநாத் பணம் செலவழித்தார். இராமன் இலங்கையிலிருந்து திரும்பும் காட்சியை நடித்துக் காட்ட நடிகர்களுக்கு அரசாங்க ஹெலிகாப்டரையும் வழங்கினார். மக்களைக் கொடும் வறுமையில் வாடவிடும் இந்த அரசாங்கம், பொதுசொத்துக்களை நாடகமாடுவதற்குச் செலவழிப்பது, தவறு அல்லவா?
- பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசாங்கம் விடுவித்த குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர், உண்மையில் அவர்கள் சிறைக்குச் செல்வார்களா என்பது தெரியாது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சிங் செய்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடும் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. உண்மையில், பிரிஜ் பூஷண் சிங் இந்தியாவில் மல்யுத்த நிர்வாகத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, விடமாட்டேன் என்கிறார். இரண்டு ஆண் மல்யுத்த வீரர்களும் தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் திருப்பி அளித்து, அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீது ஜீப் ஏற்றி நான்கு உழவர்களையும் ஒரு பத்திரிகையாளரையும் கொலை செய்ய தனது மகனைத் தூண்டிய அஜய் மிஸ்ரா தேனி, இன்னும் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இறந்தவர்களின் குடும்பத்தினர் நீதிக்காகக் காத்திருக்கும்போது, அமைச்சரின் மகன் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள லங்கா சந்தையில் இருந்து தெருவோர வியாபாரிகளின் தள்ளுவண்டிகளை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது. முந்தைய சந்தர்ப்பங்களைப் போலல்லாமல், இப்போது காவல்துறை அனுமதியின்றி தள்ளுவண்டிகளை விடுவிக்க முடியாது என்று கூறப்படுகின்றது. இதற்காகக் காவல்துறை ஆணையரிடம் கொடுத்த விண்ணப்பங்கள் செவிமடுக்கப்படவில்லை. தெருவோர வியாபாரிகளுக்கு மறுவாழ்வுக்கு உரியவற்றைச் செய்யாமல் அகற்றுவது சட்டவிரோதம் என்று கூறும் 2014 ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் சட்டம் இருந்தபோதிலும், காவல்துறையும் மாநகராட்சி ஊழியர்களும் தள்ளுவண்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
- உத்தரப்பிரதேசத்தின் இராம்நகரில், நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி, சாலை அகலப்படுத்தும் நடவடிக்கையில் வீடுகள் இடிக்கப்பட்டன. வாரணாசி மாவட்டத்தில் நில மதிப்பு சந்தை விலை விகிதங்கள் 2019 முதல் புதுப்பிக்கப்படவில்லை. எனவே காஷி துவார் திட்டத்திற்காக பிந்த்ராவில் உள்ள விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்படும்போது, விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்கவில்லை. வாரணாசியிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் விமான நிலையம் இருக்கும்போது, புதிய சர்வதேச விமான நிலையத் திட்டம் தேவையானதுதானா என்று எதிர்ப்புக்குரல் எழுப்பி அசாம்கரில், எட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். பொதுவாக, நிலம் கையகப்படுத்துவதை விவசாயிகள் விரும்பவில்லை.
- ஹர்தோய், உன்னாவ், சீதாபூர் முதலான பகுதிகளைச் சேர்ந்த, உத்திரப்பிரதேசத்தின் பெரும்பாலான விவசாயிகள், தெருவில் திரியும் கோவில் மாடுகளிடமிருந்து பயிர்களைக் காக்க இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியுள்ளது. கால்நடைகளுக்கு உணவளிக்க ஒரு நாளைக்கு 50 ரூபாய் வழங்குவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் மாட்டுக் கொட்டகைகளைக் கட்டத் தனியாகச் செலவுத் திட்டம் எதுவும் இல்லை. எனவே, ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள கிராம சபை மஹுவா தண்டா போன்ற, பெரும்பாலான கிராமத் தலைவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வழக்கில், தெருவில் திரியும் அனைத்து பசுக்களையும் மாட்டுக் கொட்டகைகளிலும் கோசாலைகளிலும் அடைத்துவைக்க தலைமைச் செயலாளரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சொந்த சாதியினருக்கும் சண்டிலா சட்டமன்ற உறுப்பினர் ஆதரவளித்து வருகிறார். இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் விவசாயம் செய்வதைக்கூட கைவிட்டுள்ளனர். ஏனெனில் உத்தபிரதேச மாநில அரசாங்கள், உழவர்கள் வயல்களுக்கு கம்பி வேலி அமைப்பதை சட்டவிரோதம் ஆக்கியுள்ளது.
- யூரியா உரத்தின் விலை உயர்வைத் தவிர்ப்பதற்கு புத்திசாலித்தனமான வழியையும் பாஜக அரசு கண்டுபிடித்துள்ளது. விலையை மாற்றாமல், ஒரு மூட்டையில் உள்ள யூரியாவின் அளவை 50 கிலோவிலிருந்து 40 கிலோவாக இரண்டு தவணைகளில் குறைத்துள்ளனர்.
- பாரபங்கி மாவட்டத்தில் உள்ள அசெனி கிராமத்தின் கிராம சபை 2021 இல் உள்ள மதுபானக் கடைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இருப்பினும், இது அரசாங்கக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறிவிட்டனர். மதுபானக் கடைகளை மூடக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆதித்யநாத் ஆட்சியில் வெளிநாட்டு மதுபானக் கடை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருப்பினும், ஜனவரி 22 ஆம் தேதிக்கு மட்டுமே மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது பாஜக அரசாங்கத்தின் கபட நாடகத்தை அம்பலப்படுத்துகிறது.
- துணை ஆசிரியர்கள் போன்ற அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் தங்கள் வேலைகளை நிரந்தரமாக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தங்களுக்கு கிடைக்கும் மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரி அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். 2022 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் நடந்த கடைசி சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு, அரசுப் பள்ளியில் தன்னர்வலராகப் பணியாற்றிய ஷிகா பால், அரசாங்கத்தின் ஒப்பந்த ஆட்சேர்ப்புக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்வி இயக்குநரகத்தில் சுமார் ஆறுமாதம் தண்ணீர் டேங்க் மேல் ஏறிப் போராட்டம் நடத்தினார்.
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கத் தேவையான ரூ.10 தபால் தலை லக்னோ, கான்பூர், பாரபங்கி, மொராதாபாத், வாரணாசி முதலான பகுதிகள் உட்பட உத்தரபிரதேசம் முழுவதும் தபால் நிலையங்களில் காணாமல் போயுள்ளன. இது பாஜக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இன்மைக்கும், அனைத்து கருத்து வேறுபாடுகளையும் ஒடுக்குவதற்குமான அடையாளம் ஆகும்.
அயோத்தியில் உள்ள இராமர் கோயில் உத்தரபிரத்திலோ அல்லது நாட்டின் பிற பகுதிகளிலோ ராம ராஜ்ஜியத்தை கொண்டு வரப் போவதில்லை. அதிகபட்சமாக, அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் அரசியல் வெற்றியை உறுதி செய்ய உதவலாம். அதனால்தான் கட்டி முடிப்பதற்கு முன்பே குடமுழுக்கு நடக்கிறது.
இராமர் கோவில், இந்து மதக் கோவில் அல்ல. அது இந்துத்துவ அரசியல் கோவில். பாஜக அதிகாரம் பெற பாடுபடும் இந்துத்துவ சங்க பரிவாரங்களின் கோவில் இது. குடமுழக்கு அழைப்பை எப்படி எதிர்கொள்வது என்று சில எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை. இது பாஜக, நரேந்திர மோடி முடிசூடும் நிகழ்வு. அதனால் இதை எதிர்கட்சிகள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
இந்துத்துவா அமைப்புகளுக்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எதிர்கட்சிகள் மனதில் நிறுத்த வேண்டும். மகாத்மா காந்தி, வினோபா பாவே, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அரவிந்த கோஷ் போன்று இந்து மதம் குறித்து எழுதியுள்ளதைப் போல, எந்த மூத்த ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தினரும், ஜனசங்கத்தினரும், விஸ்வ இந்து பரிஷத்தினரும், பாஜக தலைவரும் இதுவரை எழுதியதில்லை. எனவே, குடமுழக்கு விழாவில் பங்கேற்காதது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அதேபோல், மக்கள் இந்து மதத்தையும், இந்துத்துவ அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
தமிழாக்கம் ; தமிழ் காமராசன்