வடசென்னை பகுதியில் நல்லவராக வலம் வரும் பெஞ்ஜமின் ஒரு பரோபகாரி. பழைய குத்துச்சண்டை வீரர். சிறுவர்களை நல்ல வழிக்கு கொண்டு செல்ல பாடுபடுபவர். கால்பந்து கோச்சிங்கில் கலந்து கொள்ள பணமில்லாத ஏழைச் சிறுவன் செல்வாவுக்காக தன் தாயின் செயினை அடகு வைக்க கூட துணிபவர். அவரின் தம்பி ஜோசப் பெஞ்ஜமினுக்கு நேரெதிர். குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவன். அதே செயினை திருடி கிருபாவுடன் க்ரைம் பார்ட்னராக சேர விரும்புகிறான். கிருபா பாக்கெட் சாராயத்தில் ஆரம்பித்து பொட்டலம் பிசினஸ் வரை செய்பவன். ஜோசப்-கிருபா பார்ட்னர் தொழிலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் பெஞ்ஜமின். அதைப் பொறுக்காத கிருபா பெஞ்ஜமினை தீர்த்துக்கட்ட முனைய அதற்கு பெஞ்ஜமினின் தம்பி ஜோசப்பும் உடந்தையாக இருக்கிறான். சிறைக்குச் செல்லும் இருவரில் கிருபா மூன்றே மாதங்களில் வெளியே வந்துவிட பதினொறு வருடங்கள் தண்டனையை அனுபவித்து வெளியே வருகிறான் ஜோசப். தன்னை வகையாக சிக்க வைத்துவிட்டு வெளியே வந்து பணம், தொழில் , அரசியல் என்று செட்டிலாகி விட்ட கிருபாவை வஞ்சம் தீர்க்க நினைக்கிறான் ஜோசப். யாரை வைத்து பழி தீர்க்கலாம் என்று தேடுகையில் தன் அண்ணன் மீது அதிக அன்பு வைத்திருந்த அந்த ஏழை பையன் செல்வா கண்ணில் படுகிறான். அவனை உசுப்பேற்றி கிருபாவுக்கு எதிராக கொம்பு சீவுகிறான். செல்வா கிருபாவை கொன்றானா, ஜோசப்பின் சதியை உணர்ந்து தப்பித்தானா என்பது மீதிக் கதை.
ரத்தம், சத்தம், சண்டை, பழிக்குப்பழி, போதைப்பொருட்கள் பயன்பாடு என மீண்டும் ஒரு வடசென்னை படம். “ஏம்ப்பா எங்களையெல்லாம் நல்லவங்களாவே காட்டமாட்டீங்களாபா?” என்று அப்பகுதி மக்களே தமிழ் இயக்குனர்களின் சட்டையைப் பிடித்தால் தான் உண்டு.
பெஞ்சமின் சாவுக்கு காரணமான அவர் தம்பி ஜோசப்புடனே செல்வா சேர்ந்து கொள்வதற்கு அழுத்தமான காரணங்கள் ஏதுமில்லை. செல்வாவை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கி தான் ஜோசப் தன் வசம் வைத்திருந்தான் என்பது, ஜோசப்பிடம் இருந்து பிரியும்போது செல்வா பேசுவதிலிருந்து தான் நமக்கு தெரியவே வருகிறது. பெஞ்சமின் சாவுக்கு பழி தீர்க்கும் அவசிய காரணங்களும் செல்வாவுக்கு இல்லை. பெஞ்சமின் இறந்ததினால் செல்வாவின் வாழ்க்கை பாதை மாறியதாகவோ பாதிக்கப்பட்டதாகவோ காட்டப்படவில்லை. ஒழுக்கமாக பள்ளி முடித்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இடையிடையே கிருபாவின் அடிப்பொடிகளுடன் உரசி சண்டையிடுகிறார். அதுவும் கூட பெஞ்சமினை மனதில் வைத்து அல்ல. அந்த வயதினருக்குள் இயல்பாக ஏற்படும் ஈகோ, காதல் காரணங்களே. இதனால் மையக்கதை எது, எதை நோக்கி நம்மை இயக்குனர் அழைத்துப் போகிறார் என்பதே குழப்பமாக இருக்கிறது. பெஞ்சமின் சாவுக்கு ரிவெஞ்சா? கிருபா மேல் ஜோசப்புக்கான ரிவெஞ்சா? கதாநாயகன் செல்வாவின் வாழ்க்கையா? அவனுக்கும் கிருபா குழுவினருக்கும் அடிக்கடி ஏற்படும் மோதலா? அல்லது வடசென்னை வாழ் மக்களின் வாழ்வியலா? எது மையக்கதை என்பதில் நமக்கு ஏற்படும் குழப்பம் நம்மை சிறிது சோர்வடைய செய்கிறது என்பது உண்மையே.
ஆனால் அந்த சோர்வைப் போக்க அதிகம் மெனக்கெட்டவர்கள் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும். கூடவே அவர்களுக்குத் துணையாக எடிட்டர் கிருபாகரனும். சின்ன சின்ன காட்சிகளில் கூட லியோனின் உழைப்பு தெரிகிறது. ஆட்டோவிலிருந்து நால்வர் இறங்கும் ஒரு ஷாட்டை இப்படியும் காட்டலாமா என்பதிலிருந்து போலீஸ் ஸ்டேஷனில் மேலும் கீழும் ஏறி இறங்கும் சிங்கிள் ஷாட் வரை வெரைட்டி காட்டி வெளுத்திருக்கிறார் மனுசன். சில்ஹவுட் ஷாட்கள், ஹைஸ்பீடு ஷாட்கள் என மனுசன் ஓடிஓடி உழைத்திருக்கிறார். இவருக்கு இணையாக உழைப்பைக் கொட்டியிருப்பவர் கோவிந்த் வசந்தா. கேங்ஸ்டெர் படங்களுக்கேயான ஓவர்சவுண்டு டெம்ப்ளேட்டாக இல்லாமல் பிஜிஎம் ஃப்ரஷ் மியூசிக்காக இருந்தது ஒரு ப்ளஸ். சில கேங்ஸ்டர் படங்களிலிருந்து வெளியே வந்த சில மணிநேரங்கள் வரை அந்த சத்தம் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இதில் அந்த பிரச்சினையில்லை. “சார் ஒரே ரத்தமா இருக்கு. எனக்காக சின்னதா மெலடி போர்சன் ஒண்ணே ஒண்ணு சேத்து குடுங்க” என்று கெஞ்சி கேட்டிருப்பார் போல. அதற்காக அந்த “யாரும் காணாத..” பாடல். (பீத்தோவன் இசைத்துணுக்கின் இன்ஸ்பைரேஷன்) அதன் மெல்லிசையும் கார்த்திக் நேத்தாவின் வரிகளும் அவ்வளவு ஆதுரம். ஆரம்ப காட்சியில் வரும் பீத்தோவன் இசைத்துணுக்கு, இடையில் வரும் “ஏஞ்சோடி மஞ்சக் குருவி“ ரீமிக்ஸ் என நடுநடுவே ஃப்ரீஹிட்களில் சிக்ஸ்ம் அடித்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
அந்த “யாரும் காணாத..“ பாடலுக்கும் இன்னும் ஒன்றிரண்டு காட்சிகளுக்கும் கேமியோவாக வந்து செல்கிறார் கதாநாயகியாக அறியப்படும் மோனிஷா மோகன் மேனன். அவர் பெயர் இருக்கும் நீளத்திற்கு கூட அவருக்கு காட்சிகள் இல்லை. ப்ச்!! எதற்காக படத்தில் அந்த கேரக்டர் என்று யாருக்கும் தெரியவில்லை. “சார் பேமன்ட்லாம் ஃபுல்லா குடுத்துட்டோம். நெறய சீன்ஸ் எடுத்துட்டோம். கட் பண்ணிராதீங்க பாவம்!!” என்று எடிட்டரிடம் எவரேனும் கோரிக்கை வைத்திருக்கக் கூடும். அதனால் பாவம் பார்த்து மொத்தமாக தூக்காமல் நான்கைந்து காட்சிகள் விட்டு வைத்திருக்கிறார். படம் நெடுக எடிட்டிங்கில் நான்-லீனியர் உத்தியைக் கையாண்டிருக்கிறார் எடிட்டர் கிருபாகரன். படம் லீனியர். எடிட்டிங் நான்-லீனியர் என்பது கொஞ்சம் புதிதாக இருந்தது. அது முன்னமே திட்டமிட்டதா அல்லது படத்தில் புதிதான காட்சிகள் என்று எதுவுமில்லை, வழக்கமான வடசென்னை காட்சிகள் தான், அதனால் எடிட்டிங்கிலாவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம் என்று பின்னர் முடிவுசெய்யப்பட்டதா தெரியவில்லை. அந்த கடைசி சண்டைக்காட்சிக்கு எடிட்டரோடு சேர்ந்து ஃபைட் மாஸ்டரும் திட்டமிட்டிருக்கிறார். அவரின் உழைப்பும் படம் நெடுக தெரிகிறது. படம் முழுக்கவே ஓட்டமும் அடிதடியும் சண்டையும் தான். அவருக்கெல்லாம் டபுள் சம்பளம் கொடுத்திருக்க வேண்டும். Fight club என்று பெயர் வைத்ததற்காக படம் முழுக்க சண்டை போட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமா என்ன.
முதல் படமே இப்படியொரு களத்தில் இத்தனை கேரக்டர்களோடு எடுக்க ஒரு துணிவு வேண்டும். அதில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். என்ன.. அதே துரோகம், பழிவாங்கல் இத்யாதிகளுக்குப் பதிலாக புதிதாக ஒரு கதையை யோசித்திருக்கலாம். கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிக நடிகையர் தேர்வு செய்துவிட்டாலே பாதி வேலை சுளுவாக முடிந்து விடும். அந்த வகையில் தேர்வை சரியாக செய்திருக்கிறார். அனைவருமே நன்றாக நடித்திருந்தார்கள். கிருபாவாக நடித்திருக்கும் ஷங்கர்தாஸ் மகுடத்தில் வைரம். செல்வாவாக வரும் விஜயகுமார் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டு அந்த பாத்திரத்தை தூக்கி சுமந்ததாக பட்டது. மற்றபடி டீட்டெயிலிங்கில் இருந்து ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடிகர்கள் என்று அனைவரிடமும் அவர்களின் அதிகபட்ச உழைப்பை வாங்கத் தெரிந்த வகையில் ஒரு இயக்குனராக அவர் பணி மிகச்சிறப்பு. எழுத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இது ஒரு தரமான படைப்பாக வந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மொத்தத்தில் எழுத்தில் கொஞ்சம் கோட்டைவிட்டு டெக்னிக்கலி சவுண்டாக வெளியே வந்திருக்கிறது FIGHT CLUB.