1964-ல் அறிஞர் அண்ணா அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்ததும் பொதுக்கூட்டத்தில் பேசிய உரை வருமாறு:-
அன்புள்ள தலைவர் அவர்களே! நண்பர்களே!
சிறை சென்று மீண்ட தோழர்களுக்கு மகத்தான ஊர்வலத் தோடு சிறப்பான வரவேற்பளிக்கும் இந்த மகிழ்ச்சி நிரம்பிய விழாவிலே கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால் நமது இதயத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிவதற்குப் பதிலாக பண்டித ஜவஹர்லால் நேருவின் மறைவினால் ஆழ்ந்த வருத்தமும், துக்கமும் ஏற்பட்டு நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றன.
சிறையிலிருந்தபடியே நேருவின் மறைவுக்கு நான் என் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டேன். என்றாலும் வெளியில் வந்து நான் கலந்துகொள்ளும் முதல் கூட்டமான இதன் வாயிலாக, நாட்டுக்கு ஏற்பட்ட பெரு நஷ்டத்திற்குத் துக்கமும், மதிப்புவாய்ந்த ஒரு ஜனநாயகவாதியின் மறைவுக்கு மரியாதையும் தெரிவித்துக்கொள்ள, பொறுப்பு வாய்ந்தவன் என்ற முறையில் என் பங்கினைச் செலுத்துகிறேன்.
பண்டித நேரு இந்தியாவின் ஒப்பற்ற தலைவராக மட்டுமல்ல – அகில உலகத்துக்கே விழுமிய கருத்துக்களை எடுத்துரைக்கும் தலைவராகவும் விளங்கி வந்தார்.
அவர் பெற்றிருந்த சீரிய ஜனநாயகப் பண்புகள் நமது ஜனநாயக எண்ணங்களுக்கும், வழிமுறைகளுக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்திருந்தன என்பதைச் சொல்லிக்கொள்வதிலே நான் பெருமைப்படுகிறேன்.
இந்த நேரத்தில் சில காங்கிரஸ்காரர்கள் நினைக்கக்கூடும் பண்டித நேருவின் மறைவுக்குக் காங்கிரசைச் சாராதவர்கள், காங்கிரசை எதிர்த்து வருபவர்கள் அனுதாபம் தெரிவிக்கிறார்களே, அது என்ன காரணத்தினால் என்று ஐயுறவு கொள்ளலாம். நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவேன்.
தி. மு. கழகத்தைச் சேர்ந்தவர்கள் பண்டித நேருவால் இலாபம் பெற்றவர்கள் அல்ல! பண்டிதரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, வளர்ந்துவரும் தி. மு. கழகத்தின் சக்திக்கு நட்டத்தை உண்டாக்கினார்களே தவிர, கழகமோ, அதனைச் சார்ந்த நாங்களோ பண்டித நேருவால் இம்மியளவும் சொந்த லாபமோ, அரசியல் இலாபமோ பெற்றதில்லை!
எனினும் பண்டித ஜவஹர்லாலின் துயரம் நிரம்பிய மறைவுக்காகத் தி. மு. கழகம் மிகவும் வேதனைப்படுகிறது என்றால் அதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன. ஜனநாயக எழுச்சியை மதிக்கின்ற நல்லவர் ஒருவர் மறைந்துவிட்டார் என்பது மட்டு மல்ல; தி. மு. கழகத்தின் ஒரு உறுதியான நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்ற முறையிலும் அவரது மறைவு நமக்குச் சொந்த நட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி எதிர்ப்பு அறப்போரைத் துவக்கிய நேரத்திலே, நான் குறிப்பிட்ட சில கருத்துக்கள் உங்கள் நினைவிலே தேங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
1965-ம் ஆண்டு வரை ஏன் இந்திப் போராட்டத்தை நீட்டிக் கொண்டே போகிறீர்கள் என்று சில நண்பர்கள் கேட்டபோது நான் அதற்குப் பத்திரிகை மூலமாகவும், கூட்டங்கள் வாயிலாகவும், காரணத்தை விளக்கி இருந்தேன்:
1965-ம் ஆண்டில் இந்தி ஆட்சிமொழிபற்றி டெல்லி அரசு முடிவெடுக்கின்ற நேரத்தில் – பண்டித நேருவின் மனதில், தி. மு. கழகம் நடத்திவரும் நீண்டதொரு இந்திப் போராட்டம் ஒரு புதிய எழுச்சியினை உண்டாக்கும் – நாம் விரும்புகின்ற ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்று காரணம் கூறியிருந்தேன்.
போராட்டத்தின் தூய்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் நல்லதொரு ஜனநாயகவாதி பண்டித நேரு என்பதால் எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நம்பிக்கைக்குரியவர் மறைந்துவிட்டார். இது நமக்குச் சொந்தவழியிலே ஏற்பட்ட ஒரு நட்டம் என்று கருதி பண்டிதரின் மறைவுக்காக, தி. மு. கழகம் ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது. தனிக் கூட்டத்தின் வாயிலாக இவைகளைத் தெரிவித்துக்கொண்டபோதிலும், சொந்த முறையிலும் நான் என் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறை வாழ்க்கைபற்றியும், அங்கே இருக்கும் கொடுமைகளைப் பற்றியும் நண்பர்கள் மதியழகனும், அன்பழகனும் இங்கே குறிப்பிட்டார்கள். நான் மேலும் அவைகளைப்பற்றிக் கூற விரும்பவில்லை.
அன்பழகன் பேசும்போது எனது தோள்பட்டையிலே ஏற்பட்டிருக்கும் வலிபற்றிக் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு அண்ணா வலியால் அவதிப்படுகிறாரோ, வலி அதிகம்தானோ என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை.
ஒரு பக்கத்துத் தோள்பட்டையில்தான் வலி இருந்துவருகிறது. அதுவும் கையை உயரே தூக்க முடியாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று யாரும் எண்ணிக்கொண்டு வேதனைப்பட வேண்டாம்.
மாற்றுக் கட்சிக்காரர்களும் அண்ணாதுரைக்கு ஒரு கை போய்விட்டது என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம்.
அன்பழகன் சொன்னபடி ஒரு திங்கள் எனக்கு ஓய்வு கொடுங்கள். அதற்குள் சிறந்த மருத்துவ முறையில் என் நோயைத் தீர்த்துக் கொள்கிறேன்.
சிறைச்சாலை எங்களுக்கு எப்படி இருந்தது என்று கேட்டால் -சிறைச்சாலையாகத்தான் இருந்தது. அங்கே நாம் அதிகம் எதிர்பார்த்துப் போகவுமில்லை; இவ்வளவு துன்பங்களைத் தருகின்றார்களே என்று முணுமுணுக்கவுமில்லை.
நானும் – நமது அருமை நண்பர்களும் வருத்தப்பட்ட தெல்லாம் வேதனைப்பட்டதெல்லாம் – சிறைத்துன்பங்களுக்காக அல்ல! ஆர்வமும் உற்சாகமும் நிரம்பிய உங்களைப் பார்க்க முடியவில்லையே – உங்களது ஒளி நிரம்பிய் விழிகளைக்கண்டு பரவசம் பெற முடியவில்லையே உங்களது எழுச்சிமிக்க குரல் – ஏறுநடை ஆகியவற்றைக் காண முடியாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோமே என்பதற்குத்தான் வருந்தினோம் வேதனைப்பட்டோம்!
எங்களுக்கு ஏற்படும் சோர்வானாலும் – நோயானாலும் அதைத் தீர்க்கும் மருத்துவர்கள் எங்கள் எதிரிலே வீற்றிருக்கும் நீங்கள்தான்.
உங்களது இளநகை எங்கள் துன்பத்தைப் போக்கும்.
உங்களது உற்சாகம் எங்கள் சோர்வை நீக்கும்!
உங்களது ஒளி நிரம்பிய விழிகள் எங்கள் நோயை விரட்டும்!
எனவே என் நோய் தீர்க்கும் மருத்துவர்களைத் தேடி இங்கே வந்திருக்கிறேன். உங்களைக் கண்ட பூரிப்பில் எனக்கு ஏற்பட்ட வலி நீங்கி விரைவில் நான் பூரண நலம் பெறுவேன் என்பதை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆறு திங்களாக உங்களைப் பார்க்கமுடியாத துன்பம்தான் எனக்குப் பெரிய துன்பமாக இருந்தது.
பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களுக்குச் சிறைச்சாலை அச்சம் நிரம்பிய ஒரு இடமாக இருக்காது. வழக்கமாக உண்ணும் உணவு கிடைக்காததற்கும், வழக்கமாக அணிகின்ற உடையை அணியாததற்கும் வருத்தப்படுபவன் பொதுவாழ்வில் ஈடுபடுபவனல்ல!
அவனுக்கு ஏற்படும் குறையெல்லாம் பார்த்துப் பழகிவந்த பொதுமக்களைப் பார்க்க முடியாமல் தனியே பிரித்துவைக்கப்பட் டிருக்கும் கொடுமைதான் பெரிதாக இருக்கும்!
நானும் அப்படிப்பட்ட துன்பத்தைத்தான் பெற்றேன். அது இன்று நீங்கியது என்பதிலே மகிழ்ச்சி பெறுகின்றேன்.
நானும், நமது நண்பர்களும் சிறைச்சாலையிலே பெற்ற துன்பங்களைப்பற்றி நாவலர் எடுத்துச் சொன்னார். அவர் அடுத்த மாதம் இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு சிறைச் செல்ல இருக்கிறார். இவ்வளவு துன்பங்கள் சிறைச்சாலையிலே இருக்கின்றன என்பதைத் தெரிந்துதான் நாவலரும் மற்றவர்களும் அங்கே போகிறார்கள்.
நம்முடைய கழகத்தில் சிறைக்குச் செல்லாதவர்கள் மிகமிகக் குறைவு. பலரும் ஏதாவது ஒரு போராட்டத்தில் பங்கேற்று சிறைச்சாலைக்குப் போய்வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். மும்முனைப் போராட்டம், விலைவாசிக் குறைப்புப் போராட்டம் ஆகிய கழகம் நடத்திய பேராட்டங்களில் பங்கேற்று பக்குவப்பட்டிருக்கிறார்கள் நமது தோழர்கள்.
அவர்கள் மட்டுமல்ல – அடிக்கடி சிறைக்குப்போய்வரும் காரணத்தினால் அவர்கள் துணைவியாரும், கணவர் சிறைக்குப் போவதற்காக கண் கலங்குவதோ – கவலைப்படுவதோ இன்றி வழக்கமாக நிகழ்ந்து வரும் ஒரு வாடிக்கைச் சம்பவம் என்ற மனோநிலையைப் பெற்றுவிட்டார்கள்!
இனிமேல் நமது தோழர்கள் ஒரு இரண்டு வருடம் சிறைச்சாலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துவிட்டால் தாய்மார்கள் தங்கள் கணவரைப் பார்த்து,
“என்ன இரண்டு வருடமாகச் சும்மா இருக்கிறீர்கள்? போராட்டம் நடத்தவில்லையா? சிறைச்சாலைக்குப் போகவில்லையா?” என்று கேட்கக்கூடிய அளவுக்கு மாறிவிட்டார்கள்.
ஒரு விடுதலை இயக்கத்துக்கு இம்மாதிரியான பக்குவம் மிகமிகத் தேவைதான் – நான் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த மேடையில் சிறைச்சாலைக்குப் போய்வந்தவர்கள் பேசிய பேச்சைக் கேட்டீர்கள்.
சிறை சென்றீர்களே அதன் பயன் என்ன என்று கேட்டால் – அதற்கு மிகப்பெரிய விளக்கத்தைத் தரவேண்டியதில்லை – இங்கே அவர்கள் பேசியபோது காணப்பட்ட வீராவேசமே போதும்!
சிறைச்சாலையிலே அடைத்து வைக்கப்பட்டதால் மதியழகனும், அன்பழகனும் மனம் மாறிவிடவில்லை! ஆர்வம் குன்றிவிடவில்லை!
நாட்டுக்குச் செய்ய வேண்டிய பணிக்காக சிறைச்சென்று வந்தவர்களுக்கு ஆர்வம் குன்றிவிடாது; ஒன்றுக்குப் பத்தாக அது பெருகும். சிறைக்குப் போவதற்கு முன்பு இருந்த உறுதி சிறைக்குப் போய்விட்டு வந்தபிறகு ஓராயிரம் மடங்காக பெருகும்.
காங்கிரசில் உள்ளவர்கள் – காங்கிரசில் உள்ளவர்கள் என்பதைவிட காங்கிரஸ்காரர்கள் மட்டுமே என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். காங்கிரஸ்காரர்கள் இதைப் புரிந்து கொள்ளுவார்கள். காங்கிரசிலே உள்ளவர்க ளெல்லாம் இதைப் புரிந்துகொள்ளுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இன்றைய தினம் காங்கிரசிலே காங்கிரஸ்காரர்கள் மட்டுமே இல்லை. காங்கிரசிலே உள்ளவர்கள் வேறு – காங்கிரஸ்காரர்கள் வேறு, நான் சொன்ன விஷயம் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமே புரியும்!
காங்கிரஸ்காரர்களைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன் – நீங்கள் அலிபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டபோது அதையெல்லாம் தாங்கிக்கொண்டு கொஞ்சமும் மனம் தளராமல், இம்மியளவும் விடுதலை எண்ணத்திலிருந்து மாறுபடாமல் வெள்ளை ஏகாதிபத்தியம் ஒழியவேண்டும் என்ற எண்ணத்தோடு வெளியே வந்தீர்களல்லவா?
அதைப் போலத்தான் சிறையிலே அடைக்கப்பட்ட நாங்களும், கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு கொஞ்சமும் மனம் இளகாமல் வெளியே வந்திருக்கிறோம் இந்தி ஏகாதிபத்தியம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு. சிறைச்சாலைக்குச் சென்றதால் உள்ளம் பயமற்று இறுகிவிட்டது. அங்கே கிடைக்கும் துன்பங்கள் பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டன.
ஒரு அரசியல் இயக்கம், சிறைக்குச் செல்லும் பயத்தை இழந்து, சாதாரணமாகக் கருதி உறுதி பெற்றுவிட்டால், அரசியல் இலாப வேட்டைக்காரர்களுக்கு அது மிக ஆபத்தான கட்டம்!
நாங்கள் இப்படி அடிக்கடி சிறைக்குப் போய்வருவதால் எங்களுக்கு மட்டுமல்ல – சிறையிலே உள்ளவர்களுக்கே அந்த அச்சம் போய்விட்டது. அவர்கள் வந்துபோகின்ற இடத்துக்குத் தானே நானும் வருகிறேன் என்று கருதிவிட்டார்கள். இதைத்தான் நான் ஆபத்தான கட்டம் என்று கூற விரும்புகிறேன்.
நான் சட்டத்திற்கு மதிப்பு தரவேண்டும் என்று கருதுபவன். எதற்கெடுத்தாலும் சட்டத்தை மீறவேண்டும் என்று எண்ணுபவனல்ல நான்.
ஆனால் சட்டத்தை மதிக்காத அளவுக்கு – சட்டத்தின் தண்டனையை இலேசாகக் கருதும் அளவுக்கும் இந்த ஆட்சியாளர்கள், எதற்கெடுத்தாலும் சிறைச்சாலை எதற்கெடுத்தாலும் தண்டனை என்று அதன் தரத்தையே பாழ்படுத்துகிறார்கள்.
இது விரும்பத்தகாதது. அகற்றப்படவேண்டியது. மக்கள் சட்டத்தை மதிக்கவேண்டுமானால் ஆட்சியாளர்கள் அதை ஒரு கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, எதிரிகளை ஒழிக்கும் வாளாகப் பயன்படுத்தக்கூடாது!
இன்றைய அரசினர் சட்டத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்திருக்கும் பல சம்பவங்களே போதுமானவை!
அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவை தஞ்சையிலே கொளுத்தப் போகிறேன் என்று வெளியிலே மட்டுமல்ல சட்டமன்றத்தின் உள்ளேயும் அறிவித்த கருணாநிதியையும் 1965-லே சென்னையில் சட்டம் கொளுத்தப்போகின்ற என். வி. நடராசனையும் மதுரையில் சட்ட எரிப்புப் போராட்டம் நடந்தபோது கைது செய்தது சட்டத்தை மதிக்கின்ற போக்கா? போராட்ட ஒழுங்கை கவனிப்பதற்கும், அமைதியை நிலை நாட்டவும் சென்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றால் அதன் ரகசியம் என்ன?
நான் காங்கிரசை எதிர்ப்பதற்கு இந்திப் பிரச்சினை மட்டுமே காரணமாக இருக்கிறது என்று யாரும் தப்பாகக் கருதிவிட வேண்டாம்.
நான் பஞ்சத்துக்கு ஆண்டியல்ல, பரம்பரை ஆண்டி! இன்று நேற்றல்ல; பல வருடங்களாகவே காங்கிரசை வெறுப்பதற்கு இந்தியைத் தவிர ஆயிரத்தெட்டு பொருத்தமான காரணங்கள் இருக்கின்றன!
17 ஆண்டுகளாக ஒரே கட்சி இந்த நாட்டை ஆண்டு வருவதே முற்றிப் பழுத்த ஜனநாயகத்துக்குப் பெருமை தருவதாக இல்லை
ஒரே கட்சி ஆட்சியிலே நீடிப்பதால் ஏற்படும் தீங்குகள் பலப்பல! மக்களின் உணர்வுக்குச் செவிசாய்க்கின்ற உள்ளத்தை இழந்து, சர்வாதிகார எண்ணத்தில் நடைபோட ஒரு கட்சி ஆட்சி வழிகோலிவிடுகிறது.
பக்கத்திலே அயூப்கான் ஆட்சி நடக்கிறது. அங்கே ஜனநாயகம் என்று சொல்லப்பட்டாலும், அதன் மறைவில் சர்வாதிகாரத்தின் உருவம்தான் உட்கார்ந்துகொண்டிருக்கிறது.
ஒருவரே நாடாள வேண்டும் ஒரு கட்சியே ஆட்சியை இயக்கிக்கொண்டிருக்க வேண்டுமென்றால் – அங்கே என்னதான் ஜனநாயகம் பேசப்பட்டாலும், அது தத்துவத்திலேதான் இருக்குமே தவிர – நடைமுறைக்கு வராது.
வரி போட்டுக்கொண்டே இருப்பார்கள் – எதிர்ப்பே இல்லை, நாமேதான் ஆளுகிறோம் என்ற துணிவில்! கொடுமைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஆட்சியிலிருக்கும் என்னை யாரும் இறக்கிவிடமுடியாது என்ற தைரியத்தில்!
இதை நான் ஒரு நாளும் ஏற்கமாட்டேன். நாடாளும் பொறுப்பை மாற்றுக் கட்சிகளுக்கும் வழங்கி, கருத்து மாற்றத்துக்கும், புதிய எண்ணங்களுக்கும் மக்களிடையே தீர்ப்பு பெறுவதுதான் ஜனநாயகம் என்ற கருத்தை நான் கொண்டிருக் கிறேன். அதன்படி மாற்றுக்கட்சிக்காரன் என்ற முறையிலும் ஜனநாயகத்துக்கு மதிப்புத் தருபவன் என்ற முறையிலும், தமிழக மக்களின் இதயத்திலே நல்ல நம்பிக்கையைப் பெற்ற பெரிய இயக்கத்தின் பொறுப்பு வாய்ந்தவன் என்ற முறையிலும் காங்கிரசின் ஒரே கட்சி ஆட்சியை நான் வெறுக்கிறேன்.
இந்தி எதிர்ப்பு அறப்போரின் நோக்கம், திணிக்கப்படுகின்ற இந்தி நீக்கப்பட வேண்டும் என்பதுதான். அப்படி நீக்கப்பட ஆட்சியாளர்களின் ஆணவம் குறைக்கப்பட வேண்டும். 1967-லே நாம் மிக நன்றாக உழைத்தால் – நமது போராட்டத்தின் பலனும், உழைப்பின் பயனும் நல்லதொரு விளைவைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் என்ன சாதிக்கும் என்று கேட்பவர்கள் – தயவுசெய்து, மதுரை மாநாட்டில் தி. மு. கழகம் அறிவித்திருக்கும் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்க்கட்டும்!
தனி உடைமை வளர்ந்தும், பொதுவுடமையில் போடப்படும் மூலதனம் எங்கே போகிறது? பொருளாதாரத்தைப்பற்றிப் புரியாததாலும் நாட்டின் பொருளாதாரம் சீர்கேடடைந்து வருகிறது.
17 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆட்சியின் பலன் எங்கே போயிற்று? – ஐந்தாண்டுத் திட்டங்களால் லாபம் உண்டாகிறதா இல்லையா? இலாபம் இருக்குமானால் அது எங்கே போய் முடங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க கமிட்டி அமைக்கிறார்கள்:
மகலனோபிஸ் கமிட்டியின் அறிக்கையும் – என்ன சொல்லு கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் சீர்கேட்டுக்குக் காரணத்தை 92-வது பக்கத்தில் சொல்லி இருக்கிறார்களா, 100-வது பக்கத்தில் சொல்லி இருக்கிறார்களா என்று புரட்டிப் புரட்டிப் பார்க்க வேண்டிய துரதிருஷ்ட நிலைதான் இன்றைய ஆட்சியின் பலனாக இருக்கிறது.
ஆட்சியின் பலனை கமிட்டி போட்டு ஆராய்கின்ற அளவுக்காவது, துணிவும், ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்கும் பண்டித நேருவிடம் இருந்தது.
காங்கிரஸ் ஆட்சியினால் பலன் குவிந்துவிட்டது! பயன் நிரம்பிவிட்டது; அணைகளைக் கட்டினோம், ஆலைகளைக் கட்டினோம் என்ற மற்ற காங்கிரஸ்காரர்களைப் போல எடுத்தெறிந்து பேசாமல் பலனை ஆராய விரும்பிய பண்டிதரின் ஜனநாயகப் பண்பைப் பெரிதும் மதிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நேருவைப் பல தடவை எதிர்த்ததைப் போலவே பல தடவை தி.மு.கழகம் பாராட்டியும் இருக்கிறது.
எதிலும் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு, எதிரியா, இலேசாக மதி, துச்சமாகப் பேசு என்ற போக்கில் நான் பயின்றவனல்ல!
எந்த விஷயத்திலும் இலேசாக இருப்பவன் நான். நான் போடுகின்ற சட்டை – உண்ணுகின்ற உணவுகூட மிருதுவானதாக இருக்கும்.
பெரும்பாலும் வெள்ளைச் சட்டை போடுவேன். சில நேரங்களில் வண்ணச் சட்டையாக இருந்தால் அது இலேசான வண்ணமாக இருக்கும். அதிக வண்ணமுள்ள. சட்டை இரண்டு சலவைக்குப் போய்விட்டு வந்தால் வெளுத்துவிடும்.
எனது நண்பர் ஒருவரைப்பற்றி இந்தச் சமயத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர் மிகத் தீவிரமாக இருந்த ஒரு கருத்திலிருந்து இன்று எவ்வளவு தூரம் விலகிச் சென்றிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால் ‘கெட்டியானவர்களின் சாயம்’ உங்களுக்குப் புரியும்!
விருதுநகர் மாநாட்டிலே அந்த நண்பர் அப்போது பேசினார் -நான் அப்போது அந்த விவாதத்தில் கலந்துகொள்ள வில்லை – “மனிதன் தன் இதயத்திலிருந்து கடவுள் உணர்ச்சியை அடியோடு கைவிட்டால்தான் முன்னேற முடியும்!” என்று அவர் அங்கே பேசினார்.
அதே நண்பர்தான் இன்று தென்னாப்பிரிக்காவிலே டர்பன் நகரத்தில் திருவாசகத்தின் பெருமையையும் – கடவுளின் மகிமையையும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவரது பெயரைக் கூறுவதால் என்மீது கோபப்பட மாட்டார் என்ற நம்பிக்கையில் நான் கூறுகிறேன் – எனது அரிய நண்பர் திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமணியம்தான் அவர். இன்னும் சிலரைக்கூட என்னால் சொல்ல முடியும். அவர்கள் காட்டி வந்த தீவிரம் – பேசி வந்த பேச்சு இன்றைக்கு எங்கோ போய்விட்டது. எப்படி எப்படியோ மாறிவிட்டார்கள். அவர்களின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.
பண்டிதரின் அரசியல் முடிவுகளை நான் பலமுறை எதிர்த்து வந்தபோதிலும் – அவரது ஜனநாயகப் பண்பை பலமுறை பாராட்டியுமிருக்கிறேன்.
அவரிடம் எத்துணை ஜனநாயகப் பண்பு இருந்தது என்பதற்கு நான் கண்ட ஒரு எடுத்துக்காட்டைக் கூற விரும்பு கிறேன்.
பாராளுமன்றத்திற்கு மந்திரிகள் வரும்போது, தாங்கள் எடுத்துவர வேண்டிய ‘பைல்’களை பெரும்பாலும் எல்லா மந்திரிகளுமே தங்களது வேலைக்காரர்களிடம் கொடுத்து எடுத்துவரச்சொல்லிவிட்டுத்தான் தலை நிமிர்ந்து வருவார்கள்.
வரும்போதே வணக்கம் சொல்லுவதும், நண்பர்களின் முதுகிலே தட்டிக்கொடுத்து கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பதும், முதுகிலே தட்டும்போதே நீ இப்போது எனக்கு நண்பனாக இருக்கிறாயா- அல்லது எதிர்கோஷ்டியில் இருக்கிறாயா? அடுத்த தேர்தலில் எனக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதையெல்லாம் கண்டுகொள்வதுபோல் நெஞ்சுயர்த்தி, நிமிர்ந்த போக்கோடு, அட்டகாசமாக வருவதைக் கண்டிருக்கிறேன்.
ஆனால் பண்டித நேரு அப்படியல்ல. காரைவிட்டு அவர் கீழே இறங்குகின்ற நேரத்தில் எத்தனையோ பேர் ஓடி வருவார்கள். ஒருவர் காரின் கதவை நன்றாகத் திறந்து விடுவார். இன்னொருவர் கைகூப்பி வணங்குவார். இன்னும் சிலர் நேரு கையிலே கொண்டுவரும் பொருளை “நான் எடுத்து வருகிறேன் கொடுங்கள்” என்பார்கள்.
இத்தனை வரவேற்பும், மரியாதையும் இருந்தும் பண்டித நேரு தன் சம்பந்தப்பட்ட ‘பைலை’ யாரிடமும் கொடுக்கமாட்டார். தானே – தன் கையாலேயே எடுத்துக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்க்காமல், யார் வணக்கம் செலுத்துகிறார்கள், யார் மதிக்காமல் நிற்கிறார்கள் என்பதைக்கூட பார்க்காமல், குனிந்த தலையோடு வேகமாக நடந்து சென்று தனது நாற்காலியில் போய் உட்கார்ந்து கொள்வார்.
பக்கத்தில் இருக்கும் யாருடனாவது பேசினால், மற்றவர்களுக்கு மனவருத்தமும், குறையும் ஏற்படுமோ என்று எண்ணி நேராக தனது இடத்தை நோக்கிச் செல்லும் ஒரே மந்திரி பண்டித நேருதான்.
ஜனநாயகத்துக்கு எத்துணை மதிப்பும், வரவேற்பும் பண்டித நேரு தந்தார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் கூற விரும்புகிறேன்.
சீனப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. “லடாக் போர் முனையில் இந்தியத் துருப்புகள் எத்தனை ஆயிரம் இருக்கின்றன?” என்று ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாயி என்பவர் கேட்டார்.
இதற்குப் பொறுப்புள்ள மந்திரிகள் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். இராணுவ ரகசியங்களை வெளிப்படுத்துவது அவ்வளவு ராஜதந்திரமல்ல என்பதை மந்திரிகள் அறிவார்கள் எனவே பதில் சொல்லமாட்டார்கள் என்பதை அறிந்திருந்தும், ஆளும் கட்சிக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகள் இதைப்போன்ற கேள்விகளை கேட்பதுண்டு.
நேரு அதற்குப் பதில் சொல்லியிருந்தால் அவர் சிறந்த பிரதமராகமாட்டார். ஆனால் மற்ற மந்திரிகளைப்போல “அதை இங்கே சொல்ல விரும்பவில்லை” என்றோ “ராணுவ ரகசியத்தைத் தெரிவிக்கக்கூடாது” என்றோ அல்லது உட்கார்ந்தபடியே கையை விரித்துக் காட்டிப் பதில் சொல்ல முடியாது என்றோ சொல்லவில்லை.
வாஜ்பாயி கேட்டவுடன் பண்டித நேரு ஒருகணம் யோசித்து விட்டு தன் மேஜைமீது வைத்திருந்த சில காகிதங்களைப் புரட்டி எதையோ தேடிக் கொண்டிருப்பதுபோல இருந்தார்.
மந்திரிகள் உட்காரும் இடத்திற்குச் சற்று முன்பாகத்தான் எனது இடம் இருக்கிறது. எனது இடத்திலிருந்து பார்த்தால் மந்திரிகளின் மேஜைமீது என்ன இருக்கிறது என்பது தெரியும்.
பண்டிதர் எதைத் தேடுகிறார் என்பதை என்னால் காண முடிந்தது. அவரது மேஜையில் வெறும் வெள்ளைக் காகிதங்கள்தான் இருந்தன. என்றாலும் எதையோ தேடுவதுபோல் பண்டிதர் ஐந்து நிமிட நேரம் இருந்தார்.
பிறகு அவர் வாஜ்பாயிக்குப் பதில் சொன்னார் – “பதிலை சேகரித்துக் கொண்டு வரவில்லை!”
உடனே வாஜ்பாயி சொன்னார் “பதிலை சேகரித்துக் கொண்டு வராமல் பாராளுமன்றத்திற்குப் பிரதமர் வரக்கூடாது.
அதைக்கேட்டு நேரு சிரித்துக் கொண்டே பேசாமல் இருந்தார்.
மற்ற மந்திரிகளைப் போல நேருவும் “பதில்சொல்ல முடியாது” என்று சொல்லி இருக்கலாம். ஆனால் கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை. அதற்கு மறுப்பு சொல்ல விரும்பாமல், அதை அனுமதிப்பது போலவும் – அதே நேரத்தில் ஒரு பொறுப்புள்ள பிரதமர் போலவும் பண்டிதர் நடந்துகொண்டார்.
ஒரு பத்து நாளைக்கு முன்பு மெயில் இதழில் ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. அந்தக் கடிதத்தைப் பலர் படித்திருக்க மாட்டார்கள். மெயில் ஏட்டில் ‘பெர்டினாக்ஸ்’ என்ற பெயரில் எழுதிவரும் ரெங்கசாமி என்ற நண்பர்தான் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார்.
அதில் அவர் கூறி இருக்கும் ஒரு கருத்து நூற்றுக்கு நூறு உண்மை நிரம்பிய கருத்தாகும். “தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டதை மனப்பூர்வமாக வரவேற்று, மகிழ்ச்சியடைந்தவர்களில் பண்டித நேருவுக்கு இணையான காங்கிரஸ்காரர் வேறு யாருமே இருக்க முடியாது” என்று எழுதி இருக்கிறார்.
இந்த உண்மையை என்னாலும் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு ராஜ்ஜிய சபையில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டாகக் கூற விரும்புகிறேன்.
“இந்தியா ஒரு நாடல்ல. பல இனமக்களைக்கொண்ட ஒரு துணைக் கண்டம்!” என்று நான் அந்தச் சபையிலே பேசினேன். அதற்குப் பதிலளித்த பண்டித நேரு – “இந்தியா ஒரு நாடல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதை ஒரு நாடாக்க நாம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.
இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதே கருத்தை நாம் இங்கே கூறிவந்த நேரத்தில் – “ஆகா! இந்தப் பொடியர்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்கள். பண்டிதர் அப்படிக் கூறவில்லை – ஒத்துக்கொண்டார்.
இப்படிப்பட்ட ஒரு நல்ல ஜனநாயகவாதி மறைந்து விட்டது, நமது போராட்டத்தின் சக்தியைப் புரிந்துகொள்ளும் ஒரு பெரிய மனிதர் இறந்தது போலத்தான்.
எனினும், அவரது வழியைப் பின்பற்றப் போவதாக அறிவித் திருப்பவர்கள் தி. மு. கழகத்தின் போராட்ட எழுச்சியையும் தமிழக மக்களின் உள்ளக் கொதிப்பையும் ஓரளவுக்காவது உணர்ந்துகொள்வார்கள் என்று கருதுகிறேன்.
இந்த நேரத்தில் தமிழகத்திலுள்ள கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தி மீது உங்களுக்கு உள்ளபடியே வெறுப்பு இருக்குமானால், அதை நீங்கள் வெளிப்படுத்திக் காட்டுங்கள். அப்படிச் செய்வதால் கழகத்தின் போராட்டத்திற்கு வலிவேற்படும் என்று கருதி நீங்கள் ஒதுங்கி நின்றால், அது நாட்டுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்!
இங்கே நமது நண்பர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி அமைச்சர்களும் மாற்றார்களும் கூறிய கருத்துக்களுக்கு பதிலளித்தார்கள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் பட்டுப்போகாது துவளாது – நிறுத்தப்பட மாட்டாது; மக்களின் உணர்ச்சியிலே இரண்டறக் கலந்துவிட்டது; அழிந்து போகாது என்பதை யெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
அய்யா! இந்தி எதிர்ப்புப் போராட்டம் பட்டுப்போய் விட்டது என்று சொல்கிறாயே! அப்படியே பட்டுப்போனதாக இருக்கட்டும் -அதனால் யாருக்கு நட்டம்?
அன்பழகன் பிள்ளைக்கு மட்டும்தானா இந்தி எதிர்ப்புப் போராட்டம்? காங்கிரஸ் தலைவரின் பிள்ளைகள் இந்தி திணிப்பால் பாதிக்கப்பட மாட்டார்களா? தயவுசெய்து இந்த ஆபத்தை உணர்ந்து பாருங்கள்.
எதிர்காலத்திலே ஒரு சிறுவன் “எங்கள் தாத்தா கூட இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே ஈடுபட்டார்!” என்று கூற, மற்றொரு சிறுவன் “என் தாத்தா அப்போது வேறு பக்கமாகப் போய் நழுவிச் சென்றுவிட்டார்!” என்று உங்கள் பேரப்பிள்ளைகள் கூறுகின்ற அளவுக்குக் கேவலமாகப் போய்விடாதீர்கள்!
நாங்கள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு மட்டுமல்ல – தமிழகத்துக்கும், இந்தி பேசாத மாநிலங்களுக்கும் எதிர்கால நலன் கருதி நடத்தப்படுகின்ற போராட்டம்.
இதற்கு ஆதரவு தருபவர்கள் பகிரங்கமாக முன்வர வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்தபடியாக தோழமை உணர்ச்சி கொண்ட சுதந்திரா கட்சிக்கும், முஸ்லீம் லீக்குக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நோக்கத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம், நமது அணியை இன்னும் பலப்படுத்திக் கொள்வோம்.
ஐந்து ரூபாய் நோட்டை தனித் தனியே கிழித்தால் அதற்கு மதிப்பில்லை. அதைப்போல எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்கள் வீணாகச் சிதறுண்டு போவதில் காங்கிரசுக்குத்தான் லாபம்.
நான் சிறையிலிருந்தபோது ஆச்சாரியார் கூறிய கருத்தை நண்பர் மதியழகன் கூறினார்.
1967-ல் ஆட்சிபீடம் மாற்றப்பட வேண்டும். இல்லையேல் நம்மைத் தொடர்ந்து கவ்விக்கொண்டு வரும் துன்பங்களுக்கு விமோசனமில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“தி.மு.கழகம் ஒரு ஆளும் கட்சிக்குரிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டது!” என்றும் கூறி, தி. மு. க. வைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித் திருக்கிறார்.
தி. மு. கழகம் நாட்டு மக்களிடையே கொண்ட நம்பிக்கைக் கேற்ப 1967-ல் அந்தத் தகுதியினைப் பெறும் என்ற உறுதியோடு வரவேற்பளித்த நண்பர்களுக்கும், வந்து கூடியிருக்கும் உங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன் வணக்கம்.