மோடி அரசின் “இரு கோடுகள்” தத்துவம்

மோடி அரசின் “இரு கோடுகள்” தத்துவம்

ஒரு பெருந்தவற்றை கூச்சமில்லாமல் எப்படி செய்வது, அதை எவ்வாறு மறைப்பது, அந்த பழியை எதிராளியிடமே எவ்வாறு திருப்பி விடுவது என்பதை மோடி தலைமையிலான பாஜக அரசிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

சென்ற வாரம் பாராளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் கண்டு நாடே அதிர்ந்து போனது. ஜனநாயகத்தின் கோவில் என வர்ணிக்கப்படும் நாடாளுமன்றத்தில், அத்தனை பாதுகாப்பு வளையங்களை மீறி எப்படி இருவர் அத்துமீறினர் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கும் நிலையில், இன்றுவரை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அந்த சம்பவத்தில் ஈடுபட்டோர்கள் பற்றியோ, அதன் காரணங்கள் பற்றியோ வாய் திறக்கவேயில்லை. அதை மர்மமாகவே வைத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அந்த சம்பவத்தைப் பற்றி கேள்விகள் எழுப்பினால் பதில் சொல்வதில்லை என்பதைத் தாண்டி கேள்வி கேட்பவர்களை மிரட்டி வாயடைக்கிறது. அவர்களை உடனே இடைநீக்கம் செய்துவிடுகிறது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இதுவரை இச்சம்பவத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய 143 எம்பிக்களை இடைநீக்கம் செய்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்கியுள்ளது. உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி மறுப்பது, மீறி பேசும் உறுப்பினர்களின் மைக்கை துண்டிப்பது என்று அடக்குமுறைகளை கையாள்கிறது. இது ஆகப்பெரும் சர்வாதிகாரம். எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை நடத்திட துணிகிறது ஆளும் பாஜக அரசு என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள், தங்கள் இடைநீக்கத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் நான்கு நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இதை எந்தவிதத்திலாவது தடுக்கவேண்டும், மக்கள் மத்தியில் தங்கள் பாசிச முகம் தெரிந்துவிடக் கூடாதே என்று சிந்தித்த பாஜக அரசு இப்போது அந்த பிரச்சினையை வேறொரு பிரச்சினைக்கு மடைமாற்றிவிட்டது.

நீக்கப்பட்ட எம்பிக்கள் அனைவரும் நேற்று ஒரு குழுவாக நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தங்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பியான கல்யாண் பானர்ஜி மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் எவ்வாறு பேசுவார், எவ்வாறு சபை நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று அவரைப் போலவே பேசிக் காட்டுகிறார். ராகுல் காந்தி, அதை தனது செல்பேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலானது. சொல்லப்போனால் இது ஒரு மிகச் சாதாரண நிகழ்வு தான்.

உதாரணத்திற்கு, நீங்கள் கல்லூரியில் பயிலும் போது ஒரு விரிவுரையாளரின் காழ்ப்புணர்ச்சியால், செய்யாத குற்றத்திற்கு கல்லூரி வகுப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறீர்கள் எனில் வெளியே அமர்ந்து அதைப்பற்றி விவாதிக்கும்போது அந்த விரிவுரையாளரைப் போன்றே பேசுவதென்பது ஒரு வாடிக்கை தான். “நீ எப்படி என்னைப்போல் மிமிக்ரி செய்வாய்” என்று அந்த விரிவுரையாளர் கோபப்பட்டால் எப்படியோ அப்படி தான் இதுவும். எது பெரிய பிரச்சினை? நீங்கள் செய்யாத குற்றத்திற்கு அனுபவிக்கும் தண்டனையா? அல்லது நீங்கள் செய்த மிமிக்ரியா?

இதே தான் இங்கும் நடக்கிறது. எது பெரிய தவறு? நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து மக்கள் பிரதிநிதிகள் அவையில் கேள்விகள் எழுப்பிய போது அவர்களை வெளியேற்றியதா? அல்லது வெளியேற்றப்பட்டு அமர்ந்திருக்கையில் எம்பிக்கள் மிமிக்ரி செய்ததா? தான் செய்த பெருந்தவற்றை மறைக்க பாஜக ஒரு குள்ளநரித்தன வேலை பார்க்கிறது. சாதாரண ஒரு பிரச்சினையை பூதாகரமாக மாற்றுகிறது. சின்ன கோட்டின் அருகில் ஒரு பெரிய கோட்டை வரைகிறது. ”நீங்கள் ஒரு குடியரசுத் துணைத்தலைவரை மாநிலங்களவைத் தலைவரை கிண்டல் செய்து விட்டீர்கள். அவரின் விவசாயப் பின்புலத்தை மட்டம் தட்டி விட்டீர்கள். அவரின் “ஜாட்“ சாதியை தரக்குறைவாக பேசிவிட்டீர்கள்” என அடுக்கடுக்காக எம்பிக்கள் மீது குற்றம் சாட்டி, தான் செய்த மொத்த தவற்றையும் தந்திரமாக மடைமாற்ற நினைக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் I.N.D.I.A கூட்டணி என்றாலே இப்படித்தான் என்ற முத்திரையையும் குத்த பார்க்கிறது. தமிழக பாஜக அதையும் தாண்டி மேலே போய்விட்டது. பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை ஜனாதிபதியை அவமரியாதை செய்தது ராகுல் காந்தி என்று ஒரு அபாண்ட பழியை பரப்புகிறார். அது மட்டுமல்லாமல் நீக்கப்பட்ட எம்பிக்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டத்தையும் அறிவித்திருக்கிறார். அதையெல்லாம் விட கடைசியில் அவர் சொன்னது தான் “அடங்கோ..” என்பதான அதிர்ச்சியைத் தருகிறது. “அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். நிஜத்தில் பார்த்தால் 143 எம்பிக்களை இடைநீக்கம் செய்த பாஜக அரசு தான் அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கிய வேலையை செய்தது. இவர்கள் யாரை எதிர்த்து கண்டனக்குரல்களை ஒலிக்கப் போகிறார்கள்? முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பதைத் தாண்டி இவர்கள் அதை நம் வாயில் ஊட்டியும் விட முனைகிறார்கள்.

இந்நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்களை நீக்கம் செய்துவிட்டு சைடு கேப்பில் ஒளிபரப்பு மசோதா, தொலைத்தொடர்பு மசோதா உட்பட ஐந்து மசோதாக்களை சத்தமில்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது ஒன்றிய அரசு. இந்த தருணத்தை தான் அது எதிர்பார்த்துக் காத்திருந்ததும். எதிர்ப்பே இல்லாத ஒரு நாடாளுமன்றம். அப்படியே யாரேனும் எதிர்த்தால், அவர்களை வெளியே துரத்திவிடுவது. இந்த அடக்குமுறையை, ஜனநாயக விரோத பாசிச போக்கை மக்களிடம் கொண்டு சென்றால் அந்த சின்னக்கோடு அருகில் ஒரு பெரிய கோட்டை போட்டு பிரச்சினையை வேறுபக்கம் திசைதிருப்பி விடுவது. இதுதான் பாஜக ஸ்டைல். இதைத்தான் இப்போதும் செய்திருக்கிறது. எப்போதும் செய்யக் காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *