பல்லிளிக்கும் மோடியின் போலி தேச பாதுகாப்பும் தேச பக்தியும்!!

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் மக்களை மயக்க அவர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாடல் “தேச பாதுகாப்பு“ “தேச பக்தி” என்பதே. பாஜக மட்டுமே இந்தியாவை பாதுகாக்கும் அரணாக விளங்கும் என ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவது தான் அவர்கள் நோக்கம். ஆனால் அவையெல்லாம் வெறும் வெற்றுக் கோஷங்கள் தான் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய உதாரணம் நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல். இந்நிகழ்வுக்கு முன்னரே பாஜகவின் போலி தேச பாதுகாப்புக்கும் போலி தேச பக்திக்கும் சான்றாக பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சிலவற்றை காணலாம்.

தேசப் பாதுகாப்பில் ஊழல் :

போர் விமானப் படையை பலப்படுத்தும் பொருட்டு 126 விமானங்களைக் கோரியது இந்திய விமானப்படை. அதைக் கருத்தில் கொண்ட காங்கிரஸ் அரசு 2012ம் வருடம் அறிவித்த ஏலத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனம் வெற்றி பெற்றது. விமானம் ஒன்றுக்கு ரூ.670 கோடி என்று நிர்ணயித்து 126 விமானங்களை கட்டமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என  அதை ரத்து செய்ததுடன் விமான கொள்முதலில் பல மாற்றங்களையும் கொண்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திற்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. பாஜக ஆட்சியில் அந்த நிறுவனத்திற்கு  இடையில் மோடியின் நெருக்கமான நண்பரான அணில் அம்பானியின் “RELIANCE Defence“ நிறுவனம் நுழைந்தது. இந்திய அரசாங்கம் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தியது என்று பிரான்ஸ் நாட்டு அதிபரே கூறினார். இத்தனைக்கும் அந்த “RELIANCE Defence“ நிறுவனம் 2015ல் தான் பெயரளவில் தொடங்கப்பட்டிருந்தது. விமானக் கட்டுமானத்தில் அந்நிறுவனத்திற்கு எந்த முன்னனுபவமும் கிடையாது. அது மட்டுமல்லாமல் 126 விமானங்கள் என்று காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒப்பந்தம் வெறும் 36 விமானங்களாக சுருங்கியது, (அதைப்பற்றிய கேள்விக்கு “அத்தனை விமானங்களை நிறுத்த இடமில்லை” என்று நிர்மலா சீத்தாராமன் அளித்த பதிலுக்கு இந்தியாவே விழுந்து விழுந்து சிரித்தது)  ஆனால் விமானத்திற்கான செலவு மூன்று மடங்காக உயர்ந்திருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.670 கோடி என நிர்ணயிக்கப்பட்ட ஒரு விமானத்தின் விலை தடாலடியாக ரூ.1600 கோடிகள் என மாறியது. 60  ஆயிரம் கோடிகள் என்ற மொத்த திட்டச் செலவில் பாதி, அதாவது 30 ஆயிரம் கோடி  ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு என ஒப்பந்தமானது. கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று எதிர்கட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டின. ஆனால் மோடி அரசு எல்லாவற்றையும் புறந்தள்ளி தான் நினைத்ததை நடத்திக் கொண்டது. “தேச பாதுகாப்பு” “தேச பக்தி” என்று பாஜக சொல்வது அனைத்துமே போலியானது.

 ராணுவ வீரர்களின் உயிர் மீதான அலட்சியம் :

2019ல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை அவ்வளவு எளிதில் இந்தியர்கள் மறந்திருக்க மாட்டார்கள். விடுமுறை முடிந்து ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2500க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் 78 ராணுவ ட்ரக்குகளில் போய்க் கொண்டிருந்தனர். ஜம்மு நகரின் நெடுஞ்சாலையில் ட்ரக்குகள் போய்க்கொண்டிருந்த போது திடீரென்று எதிரே வந்த ஸ்கார்ப்பியோ கார் ஒன்று ராணுவ வீரர்களின் ட்ரக்குகளின் மீது மோதியது. மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதில் 40 ராணுவ வீரர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தேசப்பாதுகாப்பு பற்றி வீர முழக்கங்கள் இடும் மோடியின் மிகப்பெரிய தோல்வியாக தான் இதை அனைவரும் பார்த்தனர். ஆனார் அந்த துயர நிகழ்வின் அனுதாபத்தைக் கூட அடுத்து வந்த தேர்தலில் ஓட்டாக மாற்றிக் கொண்டார் மோடி. ஏதோ உச்சபட்ச பாதுகாப்பையும் மீறி நடந்துவிட்ட கோரமாக மக்களும் அதை படிப்படியாக மறந்துவிட்ட நிலையில் தான், ராணுவ வீரர்களின் அந்த உயிர்ப்பலிக்கு பாஜக அரசின் குளறுபடியும் மோடியும் ஒரு வகையில் காரணம் என்ற அதிர்ச்சிகரமான விஷயம் சமீபத்தில் வெளியே வந்தது. புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த போது ஜம்முவின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் மூன்று வருடங்கள் மௌனமாக இருந்துவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உண்மைகளை போட்டுடைத்ததும் இல்லாமல் மோடிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

ராணுவ வீரர்கள் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தரை மார்க்கமாக செல்ல சுமார் ஒன்பது மணிநேரங்களாகும். பனிப்பொழிவு இருந்தால் இன்னும் கூடுதல் நேரமாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 78 வாகனங்களில் சுமார் 1000 ராணுவ வீரர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில் 2500 வீரர்கள் நெருக்கடியாக ஏற்றிச் செல்லப்பட்டிருக்கின்றனர். வீரர்களை ஏற்றிச் செல்லும் நெடுஞ்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு எட்டு நாட்களுக்கு முன்பே உளவுத்துறை அளித்த எச்சரிப்பையும் மோடி அரசு காதில் வாங்கிக் கொள்ளாமல் அசட்டையாக இருந்திருக்கிறது. தவிர “இத்தனை ஆயிரம் ராணுவ வீரர்களை தரை வழியாக அழைத்துச் செல்வது பாதுகாப்பில்லை, அதனால் ஐந்து விமானங்கள் மட்டும் கொடுத்தால் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லலாம்“ என்று மத்திய அரசிடம் தான் கேட்டதாகவும் அதை அளிக்க அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறிய சத்யபால் மாலிக், இந்த குளறுபடிகளையெல்லாம் மோடியிடம் தான் மோடியிடம் தெரிவித்த போது மோடி “தாக்குதலின் பழியை பாகிஸ்தான் மேல் போட்டாகி விட்டது, அதனால் நீங்கள் அமைதியாக இருங்கள். எதையும் வெளியே சொல்ல வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். ராணுவ வீரர்களின் உயிரை மோடி அரசு துச்சமாக மதித்ததன் காரணம் தான் இத்தனை உயிரழப்புகளும். ஆட்சியின் நிர்வாக குளறுபடியால் 40 வீரர்களின் உயிர்களை பலிகொண்டதுமில்லாமல் அந்த விஷயத்தை ஈரச்சாக்கு போட்டு மறைத்த மோடி அரசு தான் மேடைக்கு மேடை “எல்லையில் எங்கள் ராணுவ வீரர்கள் .. .“ என்று போலியாக முழங்குகின்றது.

 எல்லைப் பாதுகாப்பில் தோல்வியும் அவமானமும் :

1960களில் இருந்து இந்திய எல்லையில் சீனத் துருப்புக்களின் ஊடுருவல் நடைபெறுவதும், இந்தியா அதை எதிர்கொள்வதும் வாடிக்கையாக நடைபெறும் ஒரு விசயம் தான் என்றாலும் எல்லைக் கட்டுப்பாட்டை இந்தியா தன் கரங்களில் வலுவாகவே வைத்திருந்தது. தேசப் பாதுகாப்பு பற்றி தேர்தல் களங்களில் வாய்கிழிய பேசும் மோடி, சீனாவை நிரந்தரமாக துரத்தி அடிப்பதாக உறுதிகூறி வாக்குகள் பெற்று ஆட்சியமைத்தார். ஆனால் கடந்த காலங்களை கணக்கிட்டால் மோடி ஆட்சியமைந்த இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தான் சீனத்துருப்புக்கள் கிழக்கு லடாக்கிலும் அருணாசலப்பிரதேச எல்லைப்பகுதியான தவாங்கிலும் நூற்றுக்கணக்கான முறை ஊடுருவியிருக்கிறது. ஊடுருவியது மட்டுமல்லாமல் ஊடுருவிய பகுதிகளை தங்கள் பகுதிகளாக அறிவித்து புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தையும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது சீனா. 2017ல் 6 பகுதிகளை தனதாக்கிக்கொண்டதாக அறிவித்த சீனா அவற்றைப் பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தது. 2021ம் வருடம் 15 இடங்களை தனதாக்கிக் கொண்ட சீனா அவற்றுக்கு “தென் திபத்“ என்று பெயரிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சீனா வெளியிட்ட சீன வரைபடத்தில் கூட சர்ச்சைக்குரிய அக்ஷய் சின் பகுதியையும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளையும், கிட்டத்தட்ட 11 ஊர்களை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றையும் பெயர் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இத்தனைக்கும் அவை அருணாசலப்பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகர் அருகில் உள்ள ஊர்கள். இவையெல்லாம் தேசப் பாதுகாப்பு  என்று நாட்டை ஏமாற்றிவரும் மோடி அரசின் தோல்வி மட்டுமல்ல அவமானங்களும்.

 நாடாளுமன்றத்துக்கே பாதுகாப்பில்லை

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக நேற்று (13-12-23) நடந்த சம்பவம் மோடி அரசின் போலி தேசப் பாதுகாப்பு கோஷத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மொத்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் கூடும் அதிமுக்கியமான அரங்கான நாடாளுமன்றத்திலேயே மர்மநபர்கள் ஊடுருவி வண்ணக்கண்ணீர்ப் புகை பொருட்களை எறிந்தபடி மோடி அரசுக்கு எதிராக கோஷமிட்டிருக்கின்றனர். வளாகத்தின் வெளியேயும் அவர்களின் ஆட்கள் இதே வேலையை செய்திருக்கின்றனர். 800 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட கோவில். அதில் மடாதிபதிகளின் கையால் சோழனின் செங்கோலை (அது உம்மிடி பங்காரு கடையில் செய்த செங்கோல்) கொண்டு வைத்து ஆட்சி நடத்தப் போகிறோம், என்றெல்லாம் நைச்சியம் பேசி மக்களை ஏமாற்றத் தெரிந்தால் மட்டும் போதுமா.? குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாமா? அந்த மர்ம நபர்களை அனுமதித்தவர் ஒரு பாஜக எம்பி. அவர்கள் அவருக்கு தெரிந்தவர்களா? ஆம் என்றால் அவர்கள் யார்? நாடாளுமன்றத்தில் ஏன் தாக்குதல் நடத்தினார்கள்?  இல்லை தெரியாதவர்களை பணம் பெற்றுக் கொண்டு அனுமதித்தாரா? இந்தக் கேள்விகள் எதற்கும் இப்போது வரை பதிலில்லை. இரண்டு மணி நேரத்தில் அவர்களைப் பற்றிய ஜாதகத்தையே எடுக்கலாம் என்றிருக்கும் போது இரண்டு நாட்களாகியும் இன்னும் எந்த ஒரு விசயத்தையும் கசிய விடாமல் இருக்கும் பாஜக அரசின் நோக்கம் தான் என்ன? இயலாமையா அல்லது எதையோ மறைக்கிறார்களா? இன்னும் இரண்டு நாட்கள் போனால் இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறதா மோடி அரசு? இன்னும் போலி தேசப்பாதுகாப்பு கோஷத்தை எவ்வளவு நாட்கள் போட்டு மக்களை ஏமாற்றப் போகிறது இந்த மோடி தலைமையிலான பாஜக அரசு?

எந்தக் கேள்விக்கும் விடை இல்லை.

இனியாவது ‘தேசபக்தி” என்ற போலி பிம்பம் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்யும் மோடி மஸ்தான் வித்தையை மக்கள் அறிந்துணர்ந்து விழிப்படைய வேண்டும்.

                                       – OR REPORTER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *