மோடியின் விளம்பர வெறிக்கு வீணாகும் மக்கள் வரிப்பணம்
நாடோடிகள் படத்தில் ‘சின்னமணி“ என்றொரு கதாபாத்திரம் இருக்கும். போகுமிடம் எல்லாம் தனக்குத் தானே ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைத்துக் கொள்ளும் ஒரு விளம்பர வெறி கதாபாத்திரம். நிஜத்திலும் ஒரு சின்னமணி உலவுகிறார். அவர் வேறு யாருமல்ல. நம் பாரத பிரதமர் மோடி தான்.
தன் விளம்பர வெறிக்கு மோடி அதிகம் நாடும் இரண்டு இடங்கள். பெட்ரோல் பங்க் மற்றும் ரயில் நிலையங்கள். நாடு முழுவதும் பரவியிருக்கும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனம் என்றால் அது ரயில்வே நிறுவனம் தான். தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் ஒரு நிறுவனம். அதனால் தான் மோடி தன் விளம்பர வெறிக்கு ரயில்வே துறையை அடிக்கடி உபயோகித்துக் கொள்வார். சில மாதங்களுக்கு முன் “வந்தே பாரத்” என்றொரு ரயிலை அறிமுகப்படுத்தியது ஒன்றிய அரசு. பொதுவாய் இப்படி ஒரு புதிய ரயில் பயன்பாட்டிற்கு வரும்போது அதை கொடியசைத்து நாட்டின் பிரதமர் துவக்கி வைப்பது வாடிக்கை தான். யார் பிரதமராயிருந்தாலும் அதை செய்வார்கள். ஆனால் மோடி தான் விளம்பர வெறியராயிற்றே. அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல் அந்த ரயில் எந்தெந்த நிலையங்களில் இருந்தெல்லாம் கிளம்பியதோ அங்கெல்லாம் தினமும் சென்று கொடியசைத்து துவக்கி வைத்துக்கொண்டேயிருந்தார். இவர் பிரதமரா இல்லை ரயில்நிலைய அதிகாரியா என்று எல்லோருக்கும் சந்தேகம் வருமளவிற்கு இவரின் விளம்பரவெறி நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
அடுத்த கட்டமாக மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லா ரயில் நிலையங்களிலும் “மோடியின் 3D செல்ஃபி பூத்” என்ற ஒன்றை நிறுவி அதில் மோடியின் முழுஉருவ கட்அவுட் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் முன் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளுமாறு ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது. இதற்கு ஒரு பூத்திற்கு ரூ.1.25 லட்சம் முதல் ரூ.6.25 லட்சம் வரை செலவிடப்பட்டு வருகிறது. இதன் மொத்தச் செலவு ரூ.1.62 கோடி என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. வடக்கே டேராடூன், அம்பாலா, புது தில்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் உள்ளிட்ட 100 ரயில் நிலையங்களில் இந்த செல்ஃபி பூத் நிறுவும் வேலைகளைத் தொடங்கியுள்ளது ஒன்றிய அரசு. தென்னக ரயில்வே மண்டலத்தில் முதற்கட்டமாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட பதினொரு நிலையங்களிலும் இந்த பூத் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளைச் செய்ய எட்டு தனியார் நிறுவனங்களை நியமித்துள்ள ஒன்றிய அரசு, அவை எந்தெந்த நிறுவனங்கள் என தெரிவிக்க மறுத்து வருகிறது.
மோடியின் விளம்பர வெறி அல்லாது இந்த செல்ஃபி பூத்களினால் மக்களுக்கு என்ன பயன்? இதற்குப் பதிலாக ரயில் கட்டணங்களைக் குறைக்கலாம், ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலவசமாக அளிக்கலாம். ஊனமுற்றோர்க்கு இலவச பயணச்சீட்டு அளிக்கலாம். ஆக்கப்பூர்வமான நிறைய விஷயங்களைச் செய்யலாம். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதிற்கொண்டு மோடி என்ற பிராண்டை விற்க பாஜக அரசு மக்கள் பணத்தை இதுபோன்ற வீண் விளம்பரச் செலவுகளை செய்து வீணடித்து வருகிறது.
மோடியின் இந்த விளம்பர பூத் விஷயத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே “மோடி அரசு வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு MGNREGA நிதிகள் ஒதுக்குவதில்லை. ஆனால் தன் மலிவான சுயதம்பட்டத்திற்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடிகளை இறைக்கிறது.” என்று சாடியுள்ளார். காங்கிரஸ் எம்பியான சசிதரூர் “இது போன்று மக்கள் வரிப்பணத்தில் வெட்கமற்ற சுய விளம்பரங்களை செய்வது, வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்வது போன்ற விஷயங்களை எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் கண்டதில்லை. இதுபோன்ற வித்தியாச விளம்பர வெறி கொண்ட தலைமைக்கு கீழ் நம் தேசம் மாட்டிக் கொண்டிருப்பது நம் துரதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார்.
ஆம். உண்மையில் இதுபோன்ற வீணான விளம்பரவெறி கொண்ட தலைமையின் கீழ் நாம் மாட்டிக் கொண்டிருப்பது நம் துரதிர்ஷ்டமே.