குரலற்றவர்களின் குரல்வளையை நெரிக்கும் மோடி அரசு!!

குரலற்றவர்களின் குரல்வளையை நெரிக்கும் மோடி அரசு!!

சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளைக் கேள்வி கேட்ட காரணத்திற்காக 150க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களை இடைநீக்கம் செய்தது மோடி தலைமயிலான பாஜக அரசு. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இத்தனை எண்ணிக்கையில் எம்பிக்களை சஸ்பென்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இதற்கும் காரணமில்லாமல் இல்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த கால இடைவெளியில் எந்தக் கேள்வியும் இல்லாமல் முக்கியமான மூன்று சட்டத்திருத்த மசோதாக்களை இயற்றியிருக்கிறது மோடி அரசு. கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இடைநீக்கமும் நிகழ்ந்திருக்கிறது. இச்சட்டங்கள் பற்றி கூறுகையில், அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஆங்கிலேய காலனிச்சட்டங்களை மாற்றி மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமைத்திருக்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் அமித்ஷா.  ஆனால் அவர்கள் மாற்றியமைத்த அச்சட்டங்கள் ஏழை, எளிய, குரலற்றவர்களின் குரல்வளையை நெருக்க வழிவகை செய்யும் சட்டங்கள் என்பது தான் உண்மை.

முதலாவதாக, சட்டங்களை புதிதாக மாற்றியமைத்திருக்கிறோம் என்பதிலேயே மறுப்பு எழுந்திருக்கிறது. புதிய சட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான விதிகள் பழையனைவை. எந்தவிதமான மாறுதலுக்கும் உட்பட்டவை அல்ல என்று தெரிவித்திருக்கிறார் அரசியலமைப்பு சட்ட வல்லுநர் பேராசிரியர் தருணாப் கைடன். திருத்தப்பட்ட 20 சதவீத சட்டமும் ஏழை, எளிய மக்களுக்கு எதிரானதாகவே அமைந்திக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் “அடுத்து அமையும் அரசு உடனடியாக இச்சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். அப்பொழுது தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்” என்றும் தெரிவித்திருக்கிறார். அப்படி என்ன மோசமான சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது?

UAPA போன்ற சிறப்பு சட்டங்கள் அல்லாது, IPC என சொல்லப்படும் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் குற்றவியல் சட்டங்களில் தான் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்வதானால் காவல்துறையின் கைகளில் வானளாவிய அதிகாரங்களைக் கொடுப்பது. காவல்துறையினரின் கைகளில் மொத்த அதிகாரத்தையும் கொடுப்பதால் விளையும் கோரங்கள் பற்றி நிறைய உதாரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு மாநில அதிரடிப்படை வீரர்கள் சத்தியமங்கலம், மேட்டூர், தாளவாடி, மாதேஸ்வரன் மலை கிராமத்து மக்களை, எந்த அளவிற்கு வன்கொடுமை செய்தார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. சமீபத்தில் வெளியான வீரப்பனின் டாக்குமென்ட்ரியில் கூட அது விரிவாக காட்டப்பட்டு பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படி ஒருவரை கைது செய்து விசாரணை செய்ய அதிகபட்சம் 15 நாட்கள் போலீஸ் கஸ்டடி எனப்படும் காவல்துறை விசாரணைக்கு அனுமதி இருந்தது. இப்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டவரைவு அதை 60 முதல் 90 நாட்கள் என நீட்டித்திருக்கிறது. அதாவது மூன்று மாதங்கள். சிந்தித்துப் பாருங்கள், ஒரு விசாரணைக் கைதி போலீஸ் காவலில் 90 நாட்கள் சித்திரவைதைப்பட்டால் என்ன நிலைக்கு ஆளாவான்? விசாரணை என்ற பேரில் பிணையில்லாத 90 நாட்களை சந்திக்கும் ஒருவன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் செயலிழந்து போவான். செய்யாத குற்றத்தைக் கூட ஒப்புக்கொள்வான். பண ரீதியான செல்வாக்கோ, அரசியல் ரீதியான செல்வாக்கோ உள்ளவர்கள் இதில் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் அவையேதும் இல்லாத ஏழை, எளிய மக்களின் கதி?

அடுத்ததாக தனிமனித சுதந்திரத்தில் கைவைத்திருக்கிறது பாஜக அரசு. அதாவது இனி எந்தவித விசாரணைக்கும் வரும் யாரிடமும் பயோமெட்ரிக் முறைப்படி விரல் ரேகைப் பதிவு, கருவிழிப்பதிவு எல்லாவற்றையும் எடுக்க வலியுறுத்தும் சட்டமசோதா. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை வாழும் நாடுகளில் தரவு பாதுகாப்பு என்பது சாத்தியப்படாதது. ஆதார் கார்டு முறை வந்தபோதே இதனடிப்படையில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் அப்போது, உங்கள் தரவுகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தது பாஜக அரசு. ஆனால் சில மாதங்களிலேயே ஆதார் விபரங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. இதே போன்று தான் இந்த சட்ட மசோதாவிலும் சிக்கல்கள் உள்ளன என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. ஒரு தொடர் குற்றவாளியின் கைரேகைகள், கருவிழி ரேகைகளை பதிவு செய்வதென்பது வழக்கம். அவனைக் கண்காணிக்க அது உதவும். ஆனால் விசாரணைக் கைதிகளுக்கும் இதே நடைமுறை என்றால், ஒருவேளை அந்த விசாரணைக் கைதி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டாலும் அவன் தனிப்பட்ட தரவுகள் அரசாங்கத்தின் கைகளில் சிக்கியிருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அவன் தொடர்ந்து கண்காணிக்கபட்டுக் கொண்டேயிருப்பான். இன்றுவரை Article 21 – Right to Privacyபடி நம் கைபேசி எண்ணைக் கூட யாரும் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற நடைமுறைச்சட்டம் உள்ளது. ஆனால் குற்றவியலை நவீனமாக்குகிறோம் என்ற பேரில், சந்தேகத்தின் பேரால் விசாரணைக்கு உள்ளாகும் ஒருவரின் மொத்த ஜாதகத்தையும் எடுத்துக் கொள்வதென்பதைத் தான் தனிமனித சுதந்திரத்திற்கு கேடானது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அடுத்து, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதிக்கு கருணைமனு போடுவதைக் குறித்தது. இந்நாள் வரை உள்ள சட்டங்களின் படி கருணை மனுவை அந்தக் கைதியின் குடும்பத்தினரோ, நண்பர்களோ, தன்னார்வ அமைப்புகளோ யார் வேண்டுமானாலும் அந்தக் கைதியில் சார்பில் தாக்கல் செய்யலாம். ஆனால் புதிதாய் வந்த சட்டமசோதாவின் படி இனி அந்த தண்டனைக் கைதி மட்டுமே தனக்கான கருணைமனுவை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் என அந்த சரத்து மாற்றப்பட்டுள்ளது. 15 நாள் காவலுக்கு பதில் 90 நாட்கள் காவலில் வைத்தாலே மனதளவில் ஒருவன் பலகீனமாகிவிடும் பட்சத்தில் பல வருடங்கள் தூக்குக்கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் ஒரு கைதிக்கு எந்த அளவிற்கு போராடும் பலம் இருக்கும்? இனி விதி விட்ட வழி என்று எந்த கருணையையும் நாடாமல் தண்டனையை ஏற்று இறந்து கூட போகலாம். படித்த, சட்ட நுணுக்கம் தெரிந்த, சட்ட விழிப்புணர்வு கொண்ட ஒருவனால் இதை முன்னெடுக்க முடியும். அல்லது குடும்பத்தினரால் உந்தப்பட்ட ஒரு தண்டனைக் கைதியால் கருணை மனு சமர்ப்பித்து தன் விடுதலையைப் பெற இயலும். ஆனால் ஒன்றுமறியாத, படிப்பறிவில்லாத ஒரு பாமர ஏழை தண்டனைக் கைதிக்கு இந்த விழிப்புணர்வை யார் அளிப்பது? அவர்களின் கருணை மனு, விடுதலை என்பதெல்லாம் இனி கானல்நீராகவே போய்விடும்.

அதுபோல “இனி வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும். விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கிடவேண்டும்” எனவும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேம்போக்கான பார்வையில் இது தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் போடப்பட்டதாக தெரியும். ஆனாலும் இதிலும் பல நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றால் அதற்குத் தகுந்த நீதிமன்ற உட்கட்டமைப்புகள், அலுவலக பணியாளர்கள், நீதிபதிகள் அதிக அளவில் பணியமர்த்தப்பட வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் தான் இன்றளவும் தீர்ப்புகள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இத்தனை நாட்களுக்குள் தீர்ப்பு கொடுக்கவேண்டும் என்ற அழுத்தம் தரப்படுமானால் அந்த அழுத்தத்தின் பால் வழங்கப்படும் தீர்ப்புகள் சிறிதளவு தடம் மாறினாலும், அது ஒரு நிரபராதிக்கு இழைக்கப்படும் அநீதியாகிவிடும். இதிலும் பாதிக்கப்படப்போவது குரலற்ற விளிம்புநிலை மக்களே.

அடுத்து தீவிரவாதத்திற்கு என்று தனிப்பட்ட சட்டங்கள் இருக்கும் போது புதிய சட்டத்திருத்தத்தில் அவற்றையும் ஐபிசி சட்டங்களுக்கு கீழ் கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது சாமானிய மக்கள் செய்யும் குற்றங்களையும் இனி அந்த கடும் சட்டங்களுக்கு கீழ் வழக்கு பதிவு செய்யலாம். எனில் மக்கள் அரசை எதிர்த்தோ, பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்தோ பேசத் தயங்குவார்கள். அரசை விமர்சிப்பது அல்லது எதிர்ப்பதென்பது தீவிரவாத்திற்கு இணையானது என்பதையே மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் மீண்டும் தெளிவாக்க முயல்கிறது. இதனால், இல்லாத ஒரு நெருக்கடி நிலையை போலியாக உருவாக்கி, மக்களை மிரட்டி வாயடைக்கும் வேலையில் பாஜக அரசு ஈடுபட்டிருப்பது தெளிவாக புலனாகிறது. இன்னும் சொல்லப்போனால் இச்சட்டம் சிறுபான்மையினரை குறிவைத்து இயற்றப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் உச்சமாக ஏழைகளுக்கான இலவச சட்ட உதவி சேவையை தடை செய்திருக்கிறது மோடி அரசு. இலவச சட்ட உதவியை யார் நாடுவார்கள்? பணக்காரர்களும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளுமா? இல்லை. ஏழை, எளிய , சட்ட விழிப்புணர்வு இல்லாத  பாமர மக்கள் மற்றும் செல்வாக்கு இல்லாத விளிம்புநிலை மனிதர்கள் தானே. இந்தியாவின் 60 சதவீத மக்கள் அந்நிலையில் இருப்பவர்களே. அந்தப் பிரிவை நீக்கியதன் மூலம் மோடி அரசு சொல்வதென்ன? குரலற்றவர்களுக்கு எதற்கு நீதியும் நியாயமும் என்பது தானே?

இந்தியாவின் மூத்த வக்கீலான கபில் சிபில் இச்சட்டங்களை “காலனிய ஆதிக்கத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் சட்டங்கள்” எனக் சாடியதோடு மட்டுமல்லாமல், ”நீதிபதிகள் சிஏஜி அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட இனி கவனமாக இருக்க வேண்டும். பேராபத்து வர இருக்கிறது. கத்தி உங்களை நோக்கியும் திரும்பலாம். பாஜகவின் இலக்கு அடுத்து நீங்களாக கூட இருக்கலாம்” என்று எச்சரித்திருக்கிறார். சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் நீதிபதிகள் மற்றும் உயர் தணிக்கை அதிகாரிகளின் நிலையே இவ்வாறாக இருக்கிறதென்றால் இனி ஏழை, எளிய குரலற்ற விளிம்பு நிலை மக்களின் கதி?

அதோ கதி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *