சுமார் 30 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்த மணிப்பூரில், கள்ள சாராயம் அதிகரிப்பு மற்றும் கருப்பு சந்தையில் மது விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், அம்மாநிலத்தில் மதுவை வாங்க, விற்க & உற்பத்தி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிட்ட ஆளும் பாஜக அரசு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ‘மணிப்பூர் மதுபானங்கள் கார்ப்பரேஷன் லிமிடட்’ (MSBCL) நிறுவனத்தை உருவாக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.
சமீபத்திய national family health survey data வின் படி, மக்கள் தொகையில் மது அருந்துவோர் தேசிய சராசரி 18.7% . அருணாச்சலப்பிரதேசமும் தெலுங்கானாவும் முறையே 52.6%, 43.4% உடன் முன்னணியில் உள்ளன. குஜராத் 5.8% கொண்ட மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம். இதன்பொருள் மதுவிலக்கு அமலில் இருந்தால் அங்கு மது நுகர்வு குறைவாக இருக்கும் என்பதல்ல. குஜராத்தின் சாதியக் கட்டமைப்பு மற்றும் மதப்பிடிமானத்தால், அங்கு வாழும் சமூகங்களிடையே மது, அசைவ உணவு உள்ளிட்ட விஷயங்களில் ஒரு சமூகக் கட்டுப்பாடு நிலவுகிறது. மதுவிலக்கே இல்லாவிட்டாலும் அங்கு மது நுகர்வின் விழுக்காட்டில் பெரிய வேறுபாடு இருக்கப்போவதில்லை.
அதேநேரத்தில் குஜராத்தில் கள்ளச்சந்தையில் மது தாராளமாகக் கிடைக்கும். அம்மாநில கள்ளச்சந்தை மதுவிற்பனையைப் பின்புலமாக வைத்து ஷாருக் கான் நடித்து Raees என்ற திரைப்படம் கூட சில வருடங்கள் முன்பு வந்துள்ளது.
எனவே அரசால் விதிக்கப்படும் மதுவிலக்கு என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு ஒழுக்கவியல் கட்டுப்பாடு போலத் தோன்றினாலும் குஜராத்திகள் அதனை ஒரு வியாபாரத் தந்திரமாகத்தான் வைத்திருக்கின்றனர். மதுவிற்பனை மூலம் அரசாங்கத்துக்கு வரவேண்டிய வரி வருவாயை கள்ளச்சந்தை வியாபாரிகள் தின்று செரிப்பதுதான் குஜராத்தின் மதுவிலக்கு மாடல்.
மதுவிலக்கு அமலில் இருக்கும் இன்னொரு பெரிய மாநிலம் பீகார். ஆனால் குஜராத்தைப் போலன்றி பீகாரில் மதுவிலக்குக்குப் பிறகும் அங்கு மது அருந்துவோர் விழுக்காடு தேசிய சராசரியை ஒட்டியே இருப்பதைக் காணலாம்.
மதுவிலக்கின் மூலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10000 கோடி ரூபாய் அளவுக்கு அம்மாநில அரசு வரி வருவாயை இழக்கிறது. 2016ல் பீகாரில் மதுவிலக்கு அமலானவுடன் பீகாரைச் சுற்றியுள்ள மாநிலங்களில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருவாய் கணிசமாக உயர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் போதைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லியோ ஒழுக்க அளவீடுகளை நிலை நிறுத்துவதாகச் சொல்லியோ எவ்விதமாயினும் இந்தியா போன்ற ஒருநாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது ஆபத்தாகவே முடியும். குஜராத் விதிவிலக்காக இருப்பதற்கு பல்வேறு சமூகப்பொருளாதாரக் காரணிகள் இருக்கலாம் ஆனால் மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை காலப்போக்கில் கள்ளச்சந்தை மதுப்புழக்கமும் கள்ளச்சாராய விற்பனையும் அரசாங்கங்களால் தீர்க்கமுடியாத பிரச்சனைகளாவதும் ஒருகட்டத்தில் மதுவிலக்கு கைவிடப்படும் சூழல் உண்டாவதும் இதனால் தான்.