ஃபேக் ஐடிகளிடம் Becareful மக்களே

 

டேட்டிங் இணையத்தளம் ஒன்றில் நட்பான பெண்ணிடம் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.60 லட்சம் பணத்தை இழந்திருக்கிறார். அடிக்கடி இதுமாதிரி செய்திகளை நாளிதழ்களில் வாசிக்கிறோம். டிவி செய்திகளில் பார்க்கிறோம்.

மேட்ரிமோனி தளங்கள், டேட்டிங் வெப்சைட்டுகள், கருத்துக் களங்கள், வலைப்பூக்கள், வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக உருவாகும் நட்புகளும், உறவுகளும் பெரும்பாலும் போலியாகவே இருக்கின்றன.

மெய்நிகர் உலகம் என்றழைக்கப்படும் இணையத் தளங்கள் சமீபகாலமாக இதுபோன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு துணை போய்க் கொண்டிருப்பது வழக்கமாக இருக்கிறது. இணையத் தளங்களின் வாயிலாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று கவலை தெரிவிக்கிறார்கள் காவல் அதிகாரிகள். கொலைகளே கூட சில சம்பவங்களில் நடந்திருக்கின்றன. அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி இளசுகள்தான். ஓரளவு உலக நடப்புகள் தெரிந்தவர்களேகூட பெங்களூர் தொழிலதிபர் மாதிரி ஒரு ஃபேக் ஐடியிடம் ஜொள்ளுவிட்டு, 60 லட்சத்தை இழந்திருக்கிறார் என்றால், பாவம் குழந்தைகள். அவர்களுக்கு என்ன தெரியும்?

இணையத்தள ஆபத்துகளை பற்றி வளர்ந்துவரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு போதுமான எச்சரிக்கையுணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை.

கேமிராவோடு கூடிய மொபைல்போன், கம்ப்யூட்டர், 5ஜி வேகத்தில் இண்டர்நெட் என்று தொழில்நுட்ப வசதிகள், இந்த தலைமுறையினருக்கு பள்ளிப் பருவத்திலேயே கிடைத்து விடுவதால் தவறாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. கொரோனா வந்தாலும் வந்தது. ஆன்லைன் கிளாஸ் சாக்கில் அத்தனை குழந்தைகளுக்கும் செல்போன் கிடைத்து விட்டது.

சமூகவலைத் தளங்கள் மூலமாக பெரியளவில் நட்பு வட்டத்தை உருவாக்க முடியும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். அதுபோலவே நமக்கு உருவாகும் நட்பு வட்டத்திலிருப்பவர்கள் சரியானவர்கள் தானா என்று தரம்பார்த்து சொல்வதற்கு யாரும் ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் வழங்கப் போவதில்லை.

ஓர் ஊரறிந்த ரகசியம்.

சாட்டிங்கிலும் சரி. சமூகவலைத் தளங்களிலும் சரி. நூற்றுக்கு தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் நட்பு கொள்ள விரும்புவது தங்கள் எதிர்பாலினத்தவரிடம் மட்டுமே.

தொழில்நுட்ப வளர்ச்சியை கடவுளே நினைத்தாலும் இனி தடுக்க முடியாது. அதே நேரம் இதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை நம்மால் தவிர்த்துக் கொள்ள முடியும்.

கம்ப்யூட்டரை குழந்தைகளுக்கு கற்றுத்தரும் போதே போதிய விழிப்புணர்வையும் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். தனி படுக்கையறையில் கம்ப்யூட்டரும், இணையமும் இருப்பதே இளசுகளை தவறு செய்யத் தூண்டுகிறது.

வீட்டில் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இடத்தில் கம்ப்யூட்டரை வைப்பது நலம். சாட்டிங் செய்துக் கொண்டிருந்தால், நட்புரீதியாக யார் என்னவென்று பெற்றோர் விசாரிக்கலாம். ‘முகம் தெரியாதவர்கள், முன்பின் அறியாதவர்கள் நேராக வந்து நம்மிடம் பேசும்போது எப்படி நடந்து கொள்கிறோமோ, அதுபோலவே இணையத்திலும் அந்நியர்களிடமும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தலாம்.

கொஞ்சம் ஏடாகூடமான ஆட்களென்றால் பெரியவர்களால் அவர்களது அனுபவம் மூலம் அடையாளம் தெரிந்துகொள்ள முடியும். நாசூக்காக பசங்களிடம் சொல்லி அதுமாதிரி தொடர்புகளை ஆரம்பத்திலேயே கட் செய்துவிடுவது நல்லது. தெரிந்த ஆட்களிடமே சாட்டிங் செய்து கொண்டிருந்தாலும் வரம்பு மீறி பழக அனுமதிக்கக் கூடாது. அவ்வப்போது என்னென்ன தளங்களை சிறுசுகள் பார்க்கிறார்கள் என்று ஓரக்கண்ணால் கண்காணிப்பதும் நல்லது.

இவை எல்லாவற்றையும் விட மேலாக குழந்தைகள் இணையத்திலேயே சைபர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது மிக முக்கியமானது. கம்ப்யூட்டரை விட பெற்றோர்தான் நமக்கு முக்கியம் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு இருக்கவேண்டும் இல்லையா?

இந்தியாவைப் பொறுத்தவரை இணையக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு சட்டத்துக்கே கூட இன்னமும் வரவில்லை என்றுதான் தோன்றுகிறது. வெளிநாடுகளில் தவறான நோக்கத்தில் மற்றவர்களோடு சாட்டிங் செய்ய நினைத்தாலே அது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. நம்மூரைப் பொறுத்தவரை ஆபாசமாகப் பேசுவதும், ஆபாசமாகப் படமெடுப்பதும் தான் குற்றம். இதற்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

குற்றம் செய்தவனுக்கு தண்டனை சரி. பாதிக்கப்பட்டவர்களுக்கு? இந்த குற்றம் என்றில்லை. எந்தவொரு குற்றத்திலுமே அப்பாவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு ஆயுள்தண்டனையாகவே அமைந்துவிடுகிறது. எந்தவொரு நிவாரணமும் இந்த பாதிப்புக்கு சமனாகாது.

தொழில்நுட்பம் கத்தி மாதிரி. காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம். குரல்வளை அறுக்கவும் உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *