இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் எம்.எஸ்.தோனி. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமின்றி, உள்ளூர் ஐபிஎல் போன்ற போட்டிகளிலும் அவர் அணிந்து விளையாடும் ஜெர்சியின் எண் ஏழு. சர்வதேசப் போட்டிகளில் தோனி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இனி எந்த விளையாட்டு வீரரின் ஜெர்சிக்கும் ஏழாம் எண் வழங்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடிய 10-ஆம் எண் ஜெர்சியும் அவரது ஓய்வுக்குப் பிறகு எவருக்குமே வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்காக மகத்தான சாதனைகள் செய்தவர்கள் என்கிற அடிப்படையில் இந்த கவுரவம் மேற்கண்ட இரு வீரர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அறிமுகமான சில போட்டிகளில் 10-ஆம் எண் ஜெர்சி அணிந்து விளையாடினார். அது டெண்டுல்கர் அணிந்த ஜெர்சியின் எண் என்று அவரது ரசிகர்கள் ஆட்சேபணை கிளப்பியதாலேயே, வேறு எவருக்கும் அந்த எண்ணை வழங்குவதில்லை என்று கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. அதுபோலவே இப்போது தோனியின் ஏழாம் எண்ணுக்கும் அத்தகைய கவுரவம் வழங்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு 1-ல் தொடங்கி 60 வரை ஜெர்சியில் எண்கள் பொறிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட எண் ஜெர்சி அணிந்து விளையாடிய வீரர், ஓய்வு பெற்றுவிட்டாலோ அல்லது தொடர்ந்து அணியில் இடம்பெறாவிட்டாலோ அவரது எண் உடனடியாக வேறு புதிய வீரருக்கு அளிக்கப்படுவதில்லை என்கிற மரபு ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் உண்டு.
எனினும் சச்சின் மற்றும் தோனி ஆகிய இருவரின் ஜெர்சி எண்கள் மட்டுமே நிரந்தரமாக எவருக்கும் வழங்கப்படுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.