ஒரே மழை! வெவ்வேறு மனிதர்கள்!!
சென்னையில் பொழிந்தது போன்றே தென்மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்திருக்கிறது மழை. அருவிகளில் வெள்ளம், ஏரிகள் உடைப்பு, தாழ்வான பகுதிகளில் நீர் என சேதங்கள் அரங்கேறியுள்ளன. சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் இந்த வருடம் பெய்த மழையளவு 150 ஆண்டு காணாதது என்கிறார்கள்.
ஆனால் இதே மழையை தென்மாவட்ட மக்கள் எதிர்கொண்ட விதமும் சென்னை மக்கள் எதிர்கொண்ட விதமும் வேறு வேறு. சென்னை மக்கள் ஒரு அச்சத்துடனேயே மழையை எதிர்கொண்டனர். தென்மாவட்ட மக்கள் அதை இயல்பாக எதிர்கொண்டனர். அதற்கு காரணங்கள் உண்டு. தென்மாவட்ட மக்கள் இன்னும் கிராமங்களில் குழுவாக, குடும்பமாக, உறவுகளாக கூடி வாழ்கின்றனர். அவர்களுக்குள்ளும் வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் உண்டு. ஆனால் யாருக்கேனும் ஒரு இடர் வந்தால் அனைத்தையும் மறந்து உதவிக்கரம் நீட்ட ஓடோடிப் போய் நிற்பார்கள். இது போன்ற பேரிடர்கள் வரும்போது கிராமமாய் திரண்டு நின்று தங்களுக்குள் கைகோர்த்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். ஒரு மடையோ, கால்வாயோ, குளமோ உடைந்தால் அனைவரும் கூடிநின்று அடைத்துக் கொள்கின்றனர். இதனால் அரசு இயந்திரம் தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்தாலே மொத்த பாதிப்புகளையும் தடுத்துவிடமுடிகிறது. சென்னையிலும் கூட இந்த பேரிடர் காலங்களில் விளிம்புநிலை மனிதர்கள் தாங்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். ஒருநாள் பால் இல்லையென்றாலோ மின்சாரம் இல்லையென்றாலோ சமாளித்துக் கொள்கின்றனர். அரசு அவர்களுக்கு உதவியாக இருந்தால் போதும். உண்மையும் அதுதான். ஒரு அரசாங்கம் பிரச்சினைகளை சமாளிக்க உதவி தான் செய்ய முடியும். எல்லோர் வீட்டு வாசல்களிலும் வந்து எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியாது.
மாறாக சென்னையில் வசிக்கும் நடுத்தர / உயர்நடுத்தர மக்களுக்கு இந்த பேரிடர் பெரும் சவால். காரணம் அவர்களாக எந்த காரியத்தையும் இறங்கி செய்து பழக்கப்பட்டவர்கள் இல்லை. தங்களுக்குரிய வேலைகளை பார்ப்பதற்கு கூட அதிகாரிகளையும்ம் அரசியல்வாதிகளையுமே சார்ந்திருக்கின்றனர். எந்த விதமான பேரிடர் வந்தாலும் அவர்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கக்கூடாது என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர். தாங்கள் வாழ்வது ஒரு காலத்தில் ஏரிகளாகவும் நீர்வழிப்பாதைகளாகவும் இருந்தது என்பதை மறந்துவிட்டனர். சாதாரண மழைகளுக்கே தாங்காத நகரமாக இருந்த சென்னையை இப்போதுதான் மழைநீர் வடிகால்கள் கட்டி ஒழுங்குபடுத்தி வரும் நிலையில் வந்தது எதிர்பாரா பெருமழை வெள்ளம். தாழ்வான பகுதி வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதை யார் நினைத்தாலும் தடுக்க இயலாது. அதை நாமே ஒரு குழுவாக, குடும்பமாக, நட்புகளாக சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலை இல்லாத காரணத்தால் தான் அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் மாறி மாறி அழைக்கின்றனர். சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்தாலும் கூட மின்சாரம் தடை இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். அதை தடையில்லாமல் தருவது அரசாங்கத்தின் தலையாய கடைமை என்றே நினைக்கின்றனர். ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மிசின், டிவி என அத்தனை பொருட்கள் இருக்கும் வீடுகளில் கூட இதுபோன்ற பேரிடர் காலங்களில் உபயோகமாகும் UPSஸோ, மினிஜெனரேட்டரோ இருப்பதில்லை. 24 மணிநேரமும் தடை இல்லாத மின்சாரம் பழகிவிட்டதன் காரணம். சரி.. இயல்பு வாழ்க்கை வாழும்போது இவையெல்லாம் தேவையில்லை. ஆனால் பேரிடர் வரப்போவதாக தெரிகிறது. வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். அரசாங்கம் எச்சரிக்கிறது. முன்னேற்பாடாக எல்லாவற்றையும் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறது. நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி வைத்துக்கொள்ளலாம். இன்னுமதிக தேவைக்கு பாத்திரங்கள், குடங்களில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளலாம் (அந்த பழக்கமே சென்னை மக்களிடம் இல்லாமல் போய்விட்டது). பால் பாக்கெட் தட்டுப்பாடு வருமென்றால் அந்த இரண்டு நாட்களுக்கு கெட்டுப்போகாத பால் பவுடர் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், இவற்றையெல்லாம் நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? ஆபத்தில் உதவத் தானே அரசாங்கம் இருக்கிறது. அதற்குத்தானே ஓட்டு போட்டோம் என்ற மனநிலையே பெரும்பாலோனோர்க்கு இருக்கிறது. எதிர்பாரா மழை பொத்துக்கொண்டு ஊற்றி, தெருவெல்லாம் வெள்ளம் வந்தாலும் பச்சை டிலைட் ஆவின் பால் சப்ளை வரவில்லை என கேட்பவர்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஒருவகையில் இதற்கு அரசாங்கமும் ஒரு காரணம். தினமும் கழிவுநீர் சுத்தம் செய்ய, குப்பைகளை சுத்தம் செய்ய என கார்ப்பரேசன் ஆட்கள், நல்லியைத் திறந்தால் கார்ப்பரேஷன் குடிதண்ணீர், 24 மணி நேர தடையில்லா மின்சாரம் என சென்னை கார்ப்பரேசன், சென்னைவாசிகளை சொகுசாக வளர்த்துவிட்டது. அதனால் தான் இதுபோன்ற பேரிடர் காலங்களில் இரண்டு நாட்கள் அந்த சொகுசு தடைபடும் போது கூட அவர்களின் கோபம் அரசாங்கத்தின் பக்கம் திரும்புகிறது. இது போன்ற பேரிடர் காலங்களை சமாளிக்க வேண்டியது நம் எல்லோரின் பொறுப்பு என்பதை மறந்து போன காரணத்தினால் தான் கழுத்தளவு நீரில் நிவாரணம் கொண்டு வருபவர்களிடம் “பச்சை டிலைட் ஆவின் பால் இல்லையா” என்று கேட்கிறார்கள், நிவாரண பணிகளுக்கு விடப்பட்ட படகில் “மெஹந்தி” போடச் செல்கிறார் ஒரு பெண்மணி. அந்த நிவாரணப் படகு வேறு எங்கேயோ நிஜமாகவே உணவில்லாமல் உயிர்பயத்தில் தவிப்பவருக்கு உதவியிருக்கக் கூடும். இன்னும் போனால் “சார் மாயாஜால் வரைக்கும் போக ஒரு போட் கொண்டு வாங்க!! ஃபேமிலியா படத்துக்கு புக் பண்ணியிருந்தோம். ப்ளீஸ்!!” என்றும் யாரோ கேட்டிருக்க கூடும்.
நாமும் சேர்ந்தது தான் அரசாங்கம் என்பதை மனதில் கொள்வதும், இதுபோன்ற காலங்களில் முன்னேற்பாடாக இருந்து கொள்வதும், கொஞ்சம் சொகுசுகளை விட்டுக்கொடுத்து பொறுத்துக் கொள்வதும் தான், அவதிப்படும் எல்லோருக்கும் அரசாங்க உதவிகள் போய்ச்சேர வழிவகை செய்யும். சுயநலங்களை மறந்து சகமனிதர்களுடன் கைகோர்த்து பழகுவது தான் இதுபோன்ற பேரிடர்களை சமாளிக்க உதவும். என்னைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. எனக்கு வேண்டியதை கொடுங்கள். நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டுபோகிறோம் என்னும் சுயநலமிக்க மக்கள் இருக்கும் எந்த நிலத்தையும் இயற்கை பார்த்துக் கொண்டிருக்காது. அழித்துவிடும்.