தமிழாக்கம் – தமிழ் காமராசன்
ராமஜென்ம பூமி இயக்கத்தை எதிர்த்த பாபா மஹந்த்லால் தாஸ் 1993-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
வாலாய் சிங்
பாபா லால் தாஸின் 26 வது நினைவு தினம் நெருங்கும் நிலையில், அவருடைய நினைவு அயோத்தியிலிருந்து கிட்டத்தட்ட அழிக்கப்படுகிறது. 1993 நவம்பர் 16 அன்று, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தையும் விஸ்வ இந்து பரிஷத்தையும் கடுமையாஜ எதிர்த்த மஹந்த்லால் தாஸை, அயோத்தியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ராணிப்பூர் சத்தார் கிராமத்தில் நள்ளிரவில் சுட்டுக் கொன்றுவிட்டனர். அவரைக் கொலை செய்தவர்களை ஒருபோதும் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. நிலத் தகராறில் கொலை நடந்தது என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், மஹந்த்லால் உயிருடன் இருந்தபோது, மற்றொரு நிலத் தகராறில் சம்பந்தபட்டிருந்தார். அவரை, 1981 ஆம் ஆண்டில், பாபர் மசூதியின் நடு குவிமாடத்தின் கீழ் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ராம் ஜன்மபூமி கோயிலின் தலைமை பூசாரியாக நீதிமன்றம் நியமித்தது. இடதுசாரி என்று பழி சுமத்தப்பட்ட மஹந்த்லால், 1984 ஆம் ஆண்டில் வி.எச்.பி.யின் ராம் ஜென்மபூமி பிரச்சாரத்தை முதன்முதலில் தொடங்கியபோதே எதிர்த்தார்.
1991 ஜூன் மாதத்தில், பாஜக உத்தரபிரதேச சட்டமன்றத்தில் 419 இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் வெற்றிபெற்றது. கல்யாண் சிங் முதலமைச்சர் ஆனார். “விஸ்வ இந்து பரிஷத், பிரம்மாண்டமான ராமர் கோயிலைக் கட்டும் திட்டத்திற்கு சில தடைகளை அடையாளம் கண்டனர். முதலாவது தடை, பாபர் மசூதி. இரண்டாவது தடை, இராமர் கோயிலின் தலைமை பூசாரி மஹந்த்லால் தாஸ்” என்று பைசாபாத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சுமன் குப்தா கூறுகிறார்.
1992 டிசம்பர் 6 அன்று மசூதி இடிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, கல்யாண் சிங் அரசாங்கம் மார்ச் 1992 இல் ஹந்த்லால் தாஸை தலைமை பூசாரி பதவியிலிருந்து நீக்கியது. மஹந்த்லால் தாஸுக்குப் பதிலாக மஹந்த் சத்யேந்திர தாஸை நியமித்தது. அவர் ராமஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகராக உள்ளார். தொலைபேசியில் பேசிய அவர், “மஹந்த்லால் தாஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால் நீக்கப்பட்டார். அவர் சர்ச்சைக்குரிய மனிதர். எனவே நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அயோத்திக்குத் தேவையில்லாதவர் ஆனார். அவர் இறந்து நீண்ட காலமாயிற்று, இப்போது ஏன் அவரைப் பற்றி கேட்கிறீர்கள்?” என்று சொன்னார்.
தன்னை நீக்கியதை எதிர்த்து மஹந்த்லால் தாஸ் தாக்கல் செய்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நிலுவையில் உள்ளது.
அவுத் [= அயோத்தி] பகுதியின் பன்மைத்துவ கங்கை-யாமுனை மத நல்லிணக்க பண்பாட்டு மரபுகளில் ஊறிப்போன மஹந்த்லால் தாஸ், ராமர் கோயில் இயக்கத்தை இந்து வாக்குகளை ஏமாற்றிப் பெறுவதற்கான பித்தலாட்ட அரசியல்தானே தவிர வேறொன்றுமில்லை என்று ஏளனம் செய்தார். அயோத்தியின் பெரும்பாலான கோயில்கள் அவுத் பகுதியின் முஸ்லிம் ஆட்சியாளர்களின் உதவியுடன் கட்டப்பட்டன என்பதையும், 1855 ஆம் ஆண்டு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு இந்து பூசாரிகளும் முஸ்லீம் பீர்களும் நல்லிணக்கத்துடன் வாழ உடன்பாடு கண்டனர் என்பது பற்றியும் அவர் அடிக்கடி சொல்லும் சில நிகழ்வுகள் சுவரசியமானவை.
இன்று, ஒரு ‘மதச்சார்பற்ற துறவி’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஹனுமன்கரி கோயிலின் மஹந்த் கியான் தாஸ் போன்ற ஒரு சில பழையவர்களைத் தவிர, மஹந்த்லால் தாஸையும் இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான மஹந்த்தின் செயல்பாட்டையும் சிலர் மட்டுமே நினைவில் கொண்டிருக்கிறார்கள். கியான் தாஸ் அவரைப் பற்றி பேச மறுத்துவிட்டார், “அவர் ஹனுமாகரியைச் சேர்ந்தவர், அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அவரை எதிரிகள் கொன்றுவிட்டனர்” என்று கூறினார்.
சர்ச்சைக்குரிய முழு இடத்தையும் (2.77 ஏக்கர்) தெய்வமான ராம் லல்லா வீராஜ்மான்[ராமர் கோயில் அறக்கட்டளை]க்கு கேள்விக்கு இடமில்லாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது மஹந்த்லால் நடத்திய போராட்டம் தோல்வியுற்றது. அயோத்தியின் சிக்கலான வரலாற்றில் இது முடிவுரை போல தோன்றுகிறது. பல ஆண்டுகளாக, அயோத்தியில் உள்ள பூசாரி கூட ‘மந்திர் வாஹின் பனாயேங்கே’ என்ற ஆதிக்க முழக்கத்தை எதிர்த்து மாறுபட தைரியம் இல்லை. இந்தச் கூச்சலை உச்ச நீதிமன்றம் ஏற்று அடிபணிந்துவிட்டது. இந்நிலையி, அயோத்தி நகரத்தில் இன்னும் நிறைய செல்வாக்கு உள்ள மனிதராக விளங்கும் கியான் தாஸ் போன்றவர்கள்கூட, ‘அயோத்தியின் எல்லைக்குள்’ புதிய மசூதியைக் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்கிற வி.எச்.பி. – ஆர்.எஸ்.எஸ். முழக்கத்திலிருந்து விலகிச் செல்லத் துணிய மாட்டார்கள்.
தீர்ப்பு நாளன்று, ஆயிரக்கணக்கான காவல்துறை படையினரும் மத்திய துணை ராணுவப் படையினரும் அமைதியை நிலைநாட்டினர். வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முளையிலேயே கிள்ளி எறிவதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்தது.
குழந்தைகளையும் இளையோரையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அவுத் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அஃபாகுல்லா, “இந்துக்கள் வருத்தப்படுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு கோயிலும் நிலமும் கிடைத்துவிட்டது. அது போதும். பெரும்பான்மை சமூகம் இனிமேல் என்ன செய்கிறது என்பதைப் பொறுத்தே தீர்ப்பு நல்லதா, கெட்டதா என்பது அமையும்” என்றார். இந்த சர்ச்சையில் மனுதாரர்களான ஹாஜி மெஹபூப், இக்பால் அன்சாரி போன்ற முஸ்லிம் சமூகத் தலைவர்கள், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்
மேலோட்டமாகப் பார்த்தால், காவி உடை அணிந்த சாதுக்கள் முல்லாக்களையும், மௌல்விகளையும் கட்டித் தழுவிக் கொள்ளும் காட்சிகள் ஏறக்குறைய பகட்டான காட்சிகளாக இருந்தாலும், அயோத்தியின் உள்ளுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணங்களும் பேச்சுகளும் அனல் எரிந்துகொண்டுள்ளன.
தீர்ப்பு நாளில், அஷர்ஃபி பவன் அருகே சிறிய கோயிலையும் உணவகத்தையும் நடத்தி வரும் இரண்டு இந்து சகோதரிகள், தங்கள் அண்டை வீட்டு எட்டு வயது சிறுவன் மன்மோகன் பாண்டேவை திட்டுவதைக் கேட்க முடிந்தது. சிறுவன் செய்த தவறு இதுதான்: தீர்ப்பு வந்த பின் ஏற்பட்ட பரபரப்பைக் கண்டு, தன்னைக் கண்டுகொள்ளாமல் என்று வருத்தமுற்ற அச்சிறுவன், “இது என்ன பெரிய விஷயம், என் வீட்டில் ராமர் கோவில் இருக்கிறது” என்று கூறினான். 30 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரிகள், “நீ முஸ்லிமா, இந்துவா?” என்று சிறுவனை நோக்கி சத்தம் போட்டனர்.
எல்லாம் முடிவுக்கு வந்துவிட வேண்டும் என நகரத்தில் மக்கள் விரும்புகிறார்கள் என்பது உண்மைதான். இந்த தீர்ப்பு அவர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்ற உணர்வை அளிக்கிறது. தீர்ப்பு ஒரு தரப்பினருக்கு நியாயமற்றது, அநீதியானது என்றாலும்; நடைமுறை தீர்வு, எல்லோரின் நன்மைக்காக சர்ச்சையை குழிதோண்டிப் புதைக்க எல்லா முயற்சிகளும் செய்யப்பட வேண்டும் என்பதை இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். நீதிமன்றம் கோயிலையும் நிலத்தை கொடுத்துவிட்டது. நகரத்திற்குள் மசூதிக்கு மாற்று இடத்தையும் வழங்க ஆணையிட்டுள்ளது. இரண்டின் கட்டுமானத்தையும் ஒரே நேரத்தில் தொடங்குவது நியாயமாகவும் விவேகமாகவும் இருக்கும்.
லால் தாஸின் குறுகிய வாழ்க்கை இன்று அயோத்தியில் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் ஒற்றுமையும் நல்லிணக்கமும் குறித்த அவரது செய்தி அயோத்திக்கும் நாட்டிற்கும் முன்னெப்போதையும் விட முக்கியமானதாகிவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான வாலே சிங், “அயோத்தி: ஐதீகமும் முரண்பாடும்” என்கிற நூலின் ஆசிரியர்.