1989-ல் குஜராத்தின் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி ரதயாத்திரையை ஆரம்பித்த போது மோடி அத்வானிக்கு மிக நெருக்கமானார். 1998 குஜராத் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கேசுபாய் படடேல் முதல்வரானார். சங்கர்சிங் வகேலா போன பிறகு கேசுபாய் பட்டேலையும் வீழ்த்த மோடி காய் நகர்த்தினார். 2000-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப நிவாரணப்பணிகளில் அரசு காட்டிய மெத்தனம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்களை சமாதானப்படுத்த வேறு ஒருவரை முதல்வராக முயன்றது பா.ஜ.க. அத்வானி மோடியை கை காட்டினார். கேசுபாய் படடேல் வீழ்ந்து மோடி முதல்வர் ஆனார்.
கோத்ரா சபர்மதி ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் கலவரம் நடந்தது. போலீஸ் வேடிக்கை பார்த்தது. மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என அன்றைய பிரதமர் வாஜ்பாய் பா.ஜ.க உயர் மட்டத்தில் சொன்னார். ஆனால், அத்வானி அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ’’மோடியை காப்பாற்றத் துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்’’ என மிரட்டினார். இதனால், வாஜ்பாய் பின்வாங்கினார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தோற்றது. தோல்விக்கு முக்கிய காரணமாக ‘குஜராத் கலவரங்களை’ வாஜ்பாய் சுட்டிக்காட்டினார். அத்வானி உட்பட யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்து இந்தியாவில் பி.ஜே.பி-யின் முகம் என நினைத்துக் கொண்டு இருந்த அத்வானிக்கு சோதனை வந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அத்வானி முன்னிறுத்தப்பட்டார். ஆனால், அத்வானி வெற்றி பெற முடியவில்லை.
அதே நேரம் பிரதமர் கனவை நோக்கி மோடி பயணித்துக் கொண்டிருந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி மட்டுமே மோடியின் பாதையில் குறுக்கே இருந்தார். குரு அத்வானியை வீழ்த்தினார் மோடி. அத்வானியின் எதிர்ப்பையும் மீறி மோடி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டார். இந்தியாவையே ஒரு காலத்தில் அதிர வைத்த அத்வானி அன்று மோடியின் முன்னே மிகவும் பலவீனமாகப் போனார். மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது அத்வானியின் குரல் எடுபடவில்லை. பிரதமர் பதவிக்காகக் காத்திருந்த அத்வானி ஓரம் கட்டப்பட்டார். மோடி பிரதமராகவும் ஆனார். அத்வானியால் அடையாளம் காட்டப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மோடி அத்வானியையே அசிங்கப்படுத்தினார்.
2018-ல் திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க கூட்டணி. புதிய முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்ற விழாவில், பிரதமர் மோடி, அத்வானி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மோடிக்கு அவர்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் பதிலுக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார் மோடி. ஆனால், அத்வானி கையெடுத்துக் கும்பிட்டபோது, பதிலுக்கு வணக்கம் செலுத்தாததோடு அவரை கண்டுகொள்ளாமல் மோடி கடந்து சென்றார். இதனால் மனமுடைந்த அத்வானியின் முகம் சுருங்கி, வேதனையோடு அமர்ந்தார்.
அந்த அத்வானிக்கு எதையாவது செய்ய வேண்டும் அல்லவா! பாரத ரத்னாவை பார்சல் செய்திருக்கிறார்கள். பிரதமர் பதவி கைநழுவி மன்மோகன் சிங்குக்கு போன போது பிரணாப் முகர்ஜி வருத்தப்பட்டார். அதற்காக அவரை ஜனாதிபதி ஆக்கியது காங்கிரஸ். ஆனால், அத்வானிக்கு அந்த மரியாதை கூட பாஜக தரவில்லை