டிசம்பர் 19 – அதிமுகவில் பரமபத ஆட்டம் தொடங்கிய நாள்

டிசம்பர் 19 – அதிமுகவில் பரமபத ஆட்டம் தொடங்கிய நாள்

டிச.19ஐ அதிமுகவினர் மறந்திருக்கலாம். ஆனால் சசிகலா மறந்திருக்க மாட்டார். ஏனென்றால் 2011 டிசம்பர் 19 அன்று தான் சசிகலாவும் அவர் கூட்டத்தாரும் ஒட்டுமொத்தமாக போயஸ் கார்டனிலிருந்து துரத்தப்பட்டார்கள். அன்று தான் அதிமுகவில் பரமபத ஆட்டம் ஆரம்பித்தது. அது தான் எடப்பாடியை முதல்வர் இருக்கையிலும் அமர வைத்தது. கொடநாடு வழக்கிலும் சிக்க வைத்தது.

சாதாரண வீடியோகேசட் கடை வைத்திருந்த சசிகலா ஜெயலலிதாவுடன் இணைந்ததும், அவரின் பினாமியாக மாறியதும் பல கோடிகளுக்கு அதிபதியானதும் தமிழகமே அறிந்த வரலாறு. அவர் மட்டுமல்லாது அவரின் உறவினர் கூட்டமும் கோடிகளில் திளைத்தது . அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் கிட்டத்தட்ட சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் 12 பவர்சென்டர்கள் இருந்தன. இப்போதிருக்கும் எம்எல்ஏ, மந்திரிகளில் பெரும்பாலோனோர் அவர்கள் வழியாக கட்சியில் பதவி வாங்கியவர்களே. ஓபிஎஸ், எடப்பாடி உட்பட.

எம்ஜிஆர் காலத்து ஆட்களை ஓரங்கட்டிவிட்டு தன் ஆட்களை அதிமுகவில் கைஓங்க வைத்து ஜெயலலிதாவை கைப்பாவையாக ஆக்கி தாங்கள் நிழல் முதலமைச்சர் ஆவது தான் சசிகலா & நடராஜனின் திட்டம். இதை கடைசி நேரத்தில் தெரிந்து சுதாரித்துக் கொண்ட ஜெயலலிதா மொத்தமாக இந்த கூட்டத்தை போயஸ்கார்டனில் இருந்து துரத்தியதோடல்லாமல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினார். அதுவரை நிலத்தைப் பார்த்தபடியே உலவிய அதிமுக முக்கிய புள்ளிகள், மந்திரிகள் அன்றிலிருந்து தான் சற்று கண்களை மேல்நோக்கி பார்க்க ஆரம்பித்தனர்.

கார்டனில் சசிகலா பார்த்துக் கொண்டிருந்த முக்கிய பணி கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் ஆகியோரை நிர்வகிப்பது மட்டுமல்ல, கான்ட்ராக்டர்கள், மந்திரிகள், அதிகாரிகள் போன்றோரிடமிருந்து கமிஷன்களை வாங்கி கணக்கு வைப்பதும் தான். அதி முக்கியமான அந்த பொறுப்பை அவ்வளவு லேசில் யாரையும் நம்பி ஜெயலலிதா ஒப்படைத்ததில்லை. 2011 சசிகலா போயஸ்கார்டனை விட்டு வெளியேறியதும் அத்தனை வருடங்கள் அவர் பார்த்துக் கொண்டிருந்த பணியை பார்த்துக் கொள்ள ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் ஐவர். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி, பழனியப்பன். சொல்லப்போனால் கடைசியாக வந்தார் வினாயக் என்பது போல் வந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு முன்னால் இருந்த முனுசாமியை நீக்கிவிட்டு கடைசியாக அந்த ஐவர் அணிக்குள் எடப்பாடியை சேர்த்தார் ஜெயலலிதா. அதன்பின்னர் அதிமுகவையே கைப்பற்றும் அளவுக்கு எடப்பாடி வந்ததெல்லாம் ட்விஸ்ட்கள் நிறைந்த “அமைதிப்படை அமாவாசை“ கதை.

இந்த ஐவர் அணியின் பெயர் “ஒழுங்கு நடவடிக்கைக் குழு“. பெயர் தான் அப்படி. ஆனால் பெயருக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. வழக்கம் போல் கமிஷன்களை நிர்வகிப்பது, எம்எல்ஏ மந்திரிகளை மேய்ப்பது போன்ற பணிகள் தான். ஆனால் அதிலும் ஒற்றுமையாக கோடிக்கணக்கில் உள்கமிஷன் அடித்தது அந்த ஐவர் அணி. அது போக 2016 தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமிக்க பரிந்துரை செய்வதற்காக அவர்களிடம் இவர்கள் ஆளாளுக்கு தனித்தனியாக அடித்த பணம் கோடிகளைத் தாண்டும். இப்படி சசிகலா இல்லாத கேப்பில் ஆயிரக்கணக்கான கோடிகளை அடித்தது இந்த ஐவர் அணி. இதை கடைசியாக தெரிந்து கொண்ட ஜெயலலிதா கடும் கோபம் கொண்டார். அந்த அணியையே கலைத்துவிட்டார். ஐவரில் ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் சட்டென சரண்டராகிவிட மற்ற மூவர் மீது ரெய்டுகளை ஏவிவிட்டார் ஜெ.. அவர்களிடமிருந்து முப்பதினாயிரம் கோடிகள் அளவுக்கு பணம் பறிக்கப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பணம் மட்டுமல்லாது சொத்து டாக்குமென்ட்டுகள், பினாமிகளின் சொத்து டாக்குமென்ட்டுகள் அனைத்தும் பறிக்கப்பட்டு கொடநாடு பங்களாவில் கொண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

2016 செப்.22 அன்று ஜெ. திடீரென்று நோய்வாய்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட அதிமுகவில் குழப்பங்கள் ஆரம்பித்தன. அதை தவிர்க்கும் பொருட்டு அக்.12 அன்று பொறுப்பு முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ்ஸிடம் சேர்த்தனர். சசிகலா அப்போதைக்கு ஓபிஎஸ்ஸை் ஏற்றுக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இதற்கு முன்பு ஜெ. பதவி இறங்க வேண்டிய காலங்களில் ஜெயலலிதாவே ஓபிஎஸ்ஸிடம் தான் இருமுறை முதலமைச்சர் பதவியைக் கொடுத்திருந்தார். மற்றொன்று ஓபிஎஸ் சசிகலாவின் சமுதாயத்தைச் சார்ந்தவர். கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாக மருத்துவமனை சிகிச்சையிலேயே இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ந்தேதி இறந்துவிட சசிகலா, அடுத்த முதல்வராக தான் வர தீர்மானித்தார். அதற்கு முக்கிய காரணம் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவது மட்டுமல்லாமல் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லாமல் இருப்பதற்காகவும் தான். ஆனால் ஓபிஎஸ் முதல்வர் பதவியைத் தர மறுத்துவிட்டார். ஒருகட்டத்தில் சசிகலாவின் பிரஷர் தாங்கமுடியாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதா சமாதியில் போய் தர்மயுத்தம் என்ற பெயரில் தியானம் செய்ய அமர்ந்துவிட்டார் ஓபிஎஸ். இந்த நேரத்தில் சசிகலாவுக்கு உற்ற துணையாக உடன் நின்றவர் எடப்பாடி பழனிச்சாமி.

சசிகலா சிறைக்கு செல்வது உறுதியாகி விட்ட காரணத்தினால் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதும் சசிகலாவின் சாய்ஸ் எடப்பாடி அல்ல. வைத்தியலிங்கம் தான். அதற்கு முக்கிய காரணம் அவரும் சசிகலாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால் அப்போது வைத்தியலிங்கம் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரை நியமிக்கவில்லை. வேறு யார் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் பக்கத்திலேயே கைகட்டி நிற்கும் அமாவாசை எடப்பாடி கண்ணில் பட்டார். வேறு சமுதாயம் என்றாலும் அவரை நம்பி முதல்வராக்கி விட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா. ஆனால் நடந்தது வேறு. அந்த நான்கு வருடங்களில் அமாவாசை எடப்பாடி தன் குணத்தைக் காட்ட ஆரம்பித்திருந்தார். சசிகலாவின் நேரடி பினாமியான டிடிவி தினகரனை கட்டம் கட்டி கட்சியை விட்டு துரத்திய எடப்பாடி, அதிரடியாக அதிமுகவை தன் சொந்த கட்சியாக ஆக்கிக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் கொடநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், நகைகள், முக்கியமாக அந்த பறிக்கப்பட்ட டாக்குமென்ட்டுகள் காணாமற் போயின. திருடர்கள் போர்வையில் உள்ளே சென்ற சிலர் அவையனைத்தையும் கொள்ளையடித்ததோடு காவலாளி ஒருவனையும் கொன்றுவிட பிரச்சினை பெரிதாகிவிட்டது. அந்த கொலையை மறைக்க வெவ்வேறு கொலைகள் நடந்தேறின.  இவையனைத்துக்கும் பின்னால் எடப்பாடி இருப்பதாக உறுதியாக சொல்கின்றனர். எந்நேரமும் எடப்பாடிக்கு எதிராக தீர்ப்புவரலாம் என்ற நிலை தான் இருக்கிறது. ஆனாலும் சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏவான ‘நாகராஜ சோழன் எம்ஏ’வாக வலம் வந்து கொண்டிருக்கிறார் முன்னாள் அமாவாசை எடப்பாடி.

ஜெயலலிதாவும் சசிகலாவும் இணக்கமாக இருந்த காலம் வரை அவர்கள் இருவரைத் தவிர யாருக்கும் அந்த கட்சியில் எந்த ஒரு அதிகாரமோ உரிமையோ இருந்ததில்லை. ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசக்கூட திராணியற்ற அடிமைகளாகவே உலவிவந்தனர். என்றைக்கு சசிகலா போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ அன்று தான் அமாவாசைகள் அரசியல்வாதிகளாக உருவாக ஆரம்பித்தார்கள். அதிகாரத்திலிருந்தவர்கள் கீழே தள்ளப்பட்டனர். கீழே இருந்தவர்கள் மேலே வந்தனர். அதிமுகவில் அந்த பரமபத ஆட்டம் ஆரம்பித்த நாள் இதே டிசம்பர் 19, 2011.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *