“ப்ளு ஸ்டார்” – திரை விமர்சனம் :
90களின் மத்தியிலான காலகட்டத்தின் ஒரு கிரிக்கெட் கதையோடு களமிறங்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் எஸ்.ஜெயக்குமார்.
அரக்கோணம் அருகே பெரும்பச்சை கிராமத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம். அதில் விளையாட மோதிக் கொள்ளும் இரு எதிரெதிர் அணிகள். ஒன்று காலனி இளைஞர்களின் ப்ளு ஸ்டார் அணி, மற்றொன்று ஆல்ஃபா பாய்ஸ் எனப்படும் ஊர் இளைஞர்களின் அணி. ப்ளு ஸ்டார் அணியின் கேப்டனாக அசோக் செல்வன். ஆல்ஃபா பாய்ஸ் அணியின் கேப்டனாக சாந்தனு பாக்கியராஜ். மைதானம் மட்டுமில்லாது பார்க்கும் இடங்களிலும் முறைத்துக் கொள்கிறார்கள். மோதிக் கொள்கிறார்கள். ஒருமுறை MCF கிரிக்கெட் ஃபெடரேசனில் இருந்து தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரர்களை இறக்கி ப்ளுஸ்டார் அணியை வெல்கிறது ஆல்ஃபா பாய்ஸ் அணி. ஆனால் ஒருகட்டத்தில் அந்த எம்சிஃஎப் அணியையே எதிர்த்து ப்ளுஸ்டாரும் ஆல்ஃபாவும் ஊர் சார்பாக கைகோர்த்து ஆட்டக்களத்தில் இறங்க வேண்டிய சூழல் உருவாகிறது. அவர்களுக்குள் தொடரும் முட்டலும் மோதலும் விளையாட்டில் எதிரொலித்ததா? எம்சிஃஎப்ஐ வென்று கோப்பையை வென்றார்களா? என்பது தான் மீதிக் கதை.
மூன்று களங்களில் கதை விரிகிறது. முக்கியமான களம் கிரிக்கெட். இரண்டாவது ஊராரின் சாதிய வேறுபாடுகள். மூன்றாவது அஷோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் காதல். படத்தின் பெரும்பகுதி கிரிக்கெட்டுக்கு தேவைப்பட்டதால் இயக்குனரால் மற்ற இரண்டு விஷயங்களையும் அழுத்திச் சொல்லமுடியவில்லை. கீர்த்தி பாண்டியனின் காதலைக் கூட கிரிக்கெட்டோடு இணைத்து வடிவமைத்திருப்பது சுவாரஸ்யம். ஆனால் ஓரளவு சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த அந்த காதல் எபிசோடு முதல் பாதியோடு காணாமல் போய்விடுகிறது. இடைவேளைக்கு பின் கீர்த்தி பாண்டியன் ஒரே ஒரு காட்சியில் தான் வருகிறார். நன்றாக போய்க்கொண்டிருந்த அவர்களின் காதல் என்னாயிற்று என்று ஒருவரியிலாவது சொல்லியிருக்கலாம். முதல்பாதியில் உருகி உருகி காதலித்துவிட்டு, இரண்டாம் பாதியில் “நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்னு கூட சொல்லிக்கலடா” என்று சாந்தனுவிடம் அசோக் செல்வன் சொல்கையில், வடிவேலுவின் “எதே..” வசனம் தான் நினைவுக்கு வந்தது.
கிராமங்களில் வழக்கமாக இருக்கும் “ஊர் vs காலனி” சாதிய பேதங்கள் இந்த கிராமத்திலும் இருக்கிறது. அது விளையாட்டிலும் எதிரொலிக்கிறது. ஆனால் அதே விளையாட்டைக் கொண்டே சாதி பேதங்களை நீக்குவதாக கதையை நகர்த்தியிருப்பது நச்!!. பின் இரு சாதிகளும் கைகோர்த்து கிரிக்கெட்டில் காலகாலமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் அந்த ஒரு ஆதிக்க சாதியை எதிர்த்து வீழ்த்துவதாக காட்டுவதில் இயக்குனர் நல்லதொரு மெசேஜை சொல்கிறார். கிரிக்கெட் தான் பிரதான களம் என்பதால் இரண்டாம் பாதி முழுக்க கேலரியில் அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. என்றாலும் கேலரியில் விற்கும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் போன்று படத்தில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் அவற்றை மறக்கடித்து விடுகின்றன.
அசோக் செல்வன் தனக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். காதலிலும் கிரிக்கெட்டிலும் ஃபோர், சிக்ஸ் என பவுண்டரிகளை அடித்து விளாசியிருக்கிறார். சாந்தனு அதிகமாக ஸ்ட்ரோக் வைத்து விளையாடினாலும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் அசோக் செல்வனுக்கு கம்பெனி கொடுத்திருக்கிறார். ஆச்சர்யமாக அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் ப்ரித்வி பாண்டியராஜன் சாந்தனுவையும் தாண்டி ஸ்கோர் செய்திருக்கிறார். வீட்டில் துடுக்குத்தனமாக வளைய வருவது, திவ்யா துரைசாமியை தள்ளி நின்று காதலிப்பது, கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக அசரடிப்பது என ப்ரித்வி அடித்தது எல்லாமே சிக்சர்கள் தான். கீர்த்தி பாண்டியனின் கண்களில் நிஜமான காதல். ஒரே ஒரு காட்சியில் வரும் அந்த பேட்ஸ்மென் பாபு கதாபாத்திரம் சுவாரஸ்ய இடைச்செருகல். அசோக்செல்வனின் அப்பாவாக வரும் குமரவேலுக்கு இதில் அவ்வளவாக ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை, ஆனால் அம்மாவாக வரும் லிஸ்ஸி யதார்த்தமான நடிப்பால் செமயாக ஸ்கோர் செய்திருக்கிறார். தீவிர கிறிஸ்தியானியாக அவர் பேசும் வசனங்களில் தியேட்டரே கலகலப்பாகிறது. கிரிக்கெட் அணியின் மென்ட்டாராக வரும் பக்ஸ் படம் முழுக்க தன் தேர்ந்த நடிப்பில் அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.
படத்துக்கு தேவையான இசையை சமரசமில்லாமல் கொடுத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. படத்தின் “ரயிலின் ஒலிகள்” பாடல் அல்ரெடி அதிரிபுதிரி ஹிட். தமிழ் அ அழகனின் ஒளிப்பதிவு எந்த இடத்திலும் திகட்டவேயில்லை. கிரிக்கெட் போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில் எடிட்டர் செல்வாவின் கடின உழைப்பு புரிந்து கொள்ளக்கூடியது என்றாலும் இன்னும் அவர் கத்தரிக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். 90களின் காலகட்டத்தை கண்முன்னே அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் எல்.ஜெயராகு.
ஆதார களமான கிரிக்கெட்டுக்கு துணையாக காதல், சாதி பேதம் என்ற இரண்டு களங்களை எடுத்துக் கொண்டதுக்கு பதில் இயக்குனர் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால் இன்னும் அழுத்தமாக தன் கருத்தை பதிய வைத்திருக்க முடியும். படத்தின் நீளமும் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கும். இது இயக்குனரின் முதல் இன்னிங்ஸ் என்பதால் சிறிய பதட்டம் தெரிந்தாலும் ஒரு தேர்ந்த ஆட்டக்காரரின் விளையாட்டு அவருக்கு கைவந்திருக்கிறது.
மொத்தத்தில் 90களின் கிரிக்கெட் நாஸ்டால்ஜியாவோடு அழகான ஒரு காதலையும் சமூகத்திற்குத் தேவையான கருத்தையும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களோடு சேர்த்து சொன்ன விதத்தில் இயக்குனர் அடித்த பவுண்டரி இந்த BLUE STAR.