CURRY and CYANIDE (Documentary film) REVIEW

CURRY and CYANIDE (Documentary film) 

தவறுவது மனித இயல்பு. அதுபோல தப்பு செய்வதும் மனித இயல்பு தான். பெரும்பாலான தப்புகள், குற்றங்கள் உணர்ச்சி வேகத்தில் நடப்பவை. சில குற்றங்கள் தவிர்க்கமுடியாத சூழலில் நடப்பவை. அந்த சூழலுக்கு தள்ளப்படும் போது, தன் தேவைக்காக ஒரு குற்றத்தை, ஒரு கொலையை செய்யவும் மனம் துணியும். தான் செய்யும் குற்றம் ஒரு நியாயமான காரணத்திற்காகத் தான் என்று மனித மனம் தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொள்ளவும் செய்யும். அவ்வாறு சந்தர்ப்பவசத்தால் நாம் செய்த அந்த குற்றம் கடுமையான குற்ற உணர்ச்சிக்கு நம்மை ஆட்படுத்தும். மாட்டிக்கொள்வோமோ, தண்டனைக்குள்ளாவோமோ என்ற பயம் நம்மை ஆட்கொண்டு அதீத மனஉளைச்சலைத் தரும். ஆனால் அந்தக் குற்றத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றால், குற்றவாளியாய் இல்லாமல் சாதாரணர்களாய் நம்மால் உலவ முடிந்தால் அந்த குற்றவுணர்ச்சியலிருந்தும் மனஉளைச்சலிலிருந்தும் சில காலத்தில் விடுபட்டு விடுவோம். இயல்பான வாழ்க்கை வாழ ஆரம்பிப்போம். சரி.. கொஞ்சகாலம் கழித்து அதே சூழ்நிலை மீண்டும் வந்தால்? அதிலிருந்து தப்பிக்க மீண்டும் ஒருமுறை அந்த குற்றத்தை, கொலையை செய்து பார்க்கலாமா என்று தோன்றுமா? ஆம். தோன்றியிருக்கிறது. அடுத்தடுத்து ஆறுமுறை தோன்றியிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு. அது தான் India Today Originals தயாரிப்பில் Christo Tomy இயக்கத்தில் NETFLIX OTT தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் CURRY AND CYANIDE டாக்குமென்ட்ரி திரைப்படம். சாதாரண பெண்ணாய் இருந்து சந்தர்ப்பவசத்தால் ஒரு கொலை செய்து, அதன்பின் தொடர்ச்சியாக ஆறு கொலைகளை செய்த ஜோலி ஜோசப் என்ற பெண்ணின் கதை. அந்த ஆறு கொலைகளையும் செய்ய நிதானமாக அவள் எடுத்துக் கொண்ட காலங்கள் 14 வருடங்கள். 2019ல் கேரளாவையே உலுக்கியது இந்த ”கூடதாயி தொடர் கொலைகள்”

2019 ஜுன் மாதத்தில் ரெஞ்சி வில்சன் என்ற பெண்மணி கோழிக்கோடு காவல்துறையினரிடம் ஒரு புகார் அளிக்கிறார். கடந்த 14 வருடங்களில் அடுத்தடுத்து இறந்து போன தன் தாய், தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள் உடலை மறுஉடற்கூராய்வு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை வைக்கிறார். காவல்துறையும் புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை ஆரம்பிக்கிறது. கிட்டத்தட்ட 200 பேர்களை விசாரித்த பின் கடைசியில் போலீசாரின் சந்தேகம் ரெஞ்சியின் அண்ணியை நோக்கி திரும்புகிறது. அவர் தான் ஜோலி ஜோசப். சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கின்றனர். முதலில் எதுவும் பேச மறுத்த ஜோலி போலீசார் திரட்டிய ஆதாரங்களை காட்டியபின் பேச ஆரம்பிக்கிறார். அவர் பேசப்பேச போலீசாரே அதிர்ந்து தான் போனார்கள்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் சாதாரண ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஜோலி ஜோசப் 1998ல் “கூடதாயி பொன்னாமட்டம்” குடும்பத்து மருமகளாகிறார். டாம் தாமஸ் – அன்னம்மா ஆகியோரின் மகனான ராய் தாமசை காதலித்து கரம்பிடிக்கிறார். டாம் தாமஸின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். நல்ல வேலையில் இருப்பவர்கள். ஜோலியும் தான் M.Com படித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். சில காலம் கழித்து ஜோலியின் மாமியார் ஜோலியை ஏதேனும் வேலைக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார். ஜோலி அதைத் தட்டிக்கழித்து வர மாமியார் விடாமல் வற்புறுத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் ஜோலியின் தந்தையிடம் இது பற்றி பேசப்போவதாக அவர் கூற, ஜோலிக்கு பயம் வருகிறது. ஏனென்றால் உண்மையில் ஜோலி M.Com படித்தவரில்லை. இளநிலைக் கல்லூரி படிப்பையே பாதியில் விட்ட பெண். எங்கே மாமியார் தன் தந்தையிடம் பேசினால் தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவள் எடுத்த விபரீத முடிவு தான் முதல் குற்றத்தின் விதை.

அது 2002ம் வருடம். மாமியார் அன்னம்மாளின் உணவில் சயனைடை கலந்து கொடுக்கிறாள் ஜோலி. அதை உண்ட மாமியார் சில நிமிடங்களிலேயே மூச்சுவிட முடியாமல் சுருண்டு விழ மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு அவர் உயிரிழக்கிறார். ஏற்கனவே வயதானவர், சில வியாதிகள் கொண்டவர் என்பதால் அன்னம்மாளின் மரணத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்றே நினைக்கிறார்கள். ஆதலால் உடற்கூராய்வுக்கும் யாரும் கோரவில்லை. இது ஜோலிக்கு சாதகமாகிப் போனது. ஏதுமறியாதவர் போல் இயல்பு வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறார். ஜோலியின் கணவர் ராய் வெளிநாட்டில் பணிபுரிய, இங்கு NITயில் தனக்கு கௌரவ லெக்சரர் வேலை கிடைத்திருப்பதாக கூறி ஜோலியும் தினமும் வேலைக்கு போக ஆரம்பிக்கிறாள். ஜோலிக்கு அந்நாட்களில் M.S.மேத்யூ என்பவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் இறந்துபோன அன்னம்மாள் தாமசின் உறவினர் என்றாலும் அந்த பழக்கம் ஜோலியின் மாமனாருக்கு உவப்பாக இல்லை. இதற்கிடையில் ஜோலிக்கும் மாமனாருக்கும் சொத்து குறித்த சில கருத்து வேறுபாடுகள், விவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

  1. வழக்கம் போல் உணவு உண்டுவிட்டு தனது மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஜோலியின் மாமனார் டாம் தாமஸ் திடீரென்று சுருண்டு விழுகிறார். சிறிது நேரம் கழித்து ஜோலி அக்கம் பக்கத்தினரிடம் மாமனாருக்கு மாரடைப்பு என்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்கிறார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். மாரடைப்பில் இறந்ததாகவே அனைவரும் நம்புகின்றனர். வயது காரணமாக யாருக்கும் அந்த இறப்பிலும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஜோலிக்கு தான் போகும்பாதை சரியென தோன்ற ஆரம்பிக்கிறது.

சில வருடங்களில் ஜோலியின் கணவர் ராய் தாமசின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. நிறைய பணத்தட்டுப்பாடு ஏற்படுகிறது. கடன் கழுத்தை நெரிக்கிறது. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் வசிக்கும் வீட்டை ஜோலியின் பெயருக்கு மாமனார் எழுதி வைத்திருப்பதாக ஒரு உயிலை காண்பிக்கிறாள் ஜோலி. வீட்டினுள் அது ஒரு புகைச்சலை உருவாக்குகிறது. மேலும் மேத்யூசின் தொடர்பு பற்றி ஜோலியிடம் ராய் கேட்க ஆரம்பிக்கிறார். அதுவும் சண்டைகளில் போய் முடிகிறது. 2011ம் வருடம். கணவர் ராய் க்கான உணவை சமைத்து வைத்து விட்டு ஜோலி தூங்கிவிட, இரவு தாமதமாக வீட்டிற்கு வருகிறார் ராய் தாமஸ். சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து கழிப்பறை சென்றவர் திரும்பி வரவில்லை. ஜோலி போய் அக்கம் பக்கத்தினரிடம் உதவிகோர, அவர்கள் ராயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ராய் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என ஜோலி கேட்டுக்கொள்கிறாள். ஆனால் ராயின் குடும்ப நண்பரான மற்றொரு மேத்யூஸ் மஞ்சாடி என்பவர் உடற்கூறு செய்ய வலியுறுத்தி செய்ய வைக்கிறார். கூராய்வு அறிக்கையில் ராயின் மரணம் சயனைட் விஷத்தினால் ஏற்பட்டது என கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் இப்போதும் காலம் ஜோலியைக் காப்பாற்றுகிறது. ஏற்கனவே வியாபார நஷ்டம், பணத்தட்டுப்பாடு, கடன் பிரச்சினையில் இருந்த ராய் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. ஜோலி நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.

ஒன்றல்ல இரண்டல்ல மூன்றாவது மரணமும் ஜோலியை காட்டிக்கொடுக்கவில்லை. அதற்குப் பிறகும் ஜோலிக்கு நெருக்கமான குடும்பங்களில் மூன்று மரணங்கள் நிகழ்கின்றன. அதில் ராயின் உடற்கூராய்வை செய்யச் சொன்ன மேத்யூஸ் மஞ்சாடியும் ஒருவர். அவர் இறந்தது ஜோலியின் வீட்டில். இன்னுமொரு பெண், அவரின் இரண்டு வயதுக் குழந்தை என மொத்தம் ஆறு மரணங்கள். எல்லாமும் ஜோலியோடு தொடர்புடைய, ஜோலியோடு ஏதோ ஒருவகையில் பின்னப்பட்ட மரணங்கள். ஆனாலும் இந்த ஆறு மரணங்களுக்குப் பின்னும் யாருக்கும் ஜோலியின் மேல் சந்தேகம் வரவில்லை. காரணம் எந்த மரணத்தையும் கொலையாக கருதினால் தான் இன்னொருவர் மேல் சந்தேகம் வரும். நிகழ்ந்த மரணங்கள் எல்லாமும் தற்செயலாக நடந்ததாகவே கருதப்பட்டிருக்கிறது. ஜோலி மிக புத்திசாலித்தனமாக வலிந்து அவ்வாறு கட்டமைக்கவும் இல்லை. காலம் அவளுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. அவ்வளவுதான். தவிர ஒவ்வொரு மரணமும் சில வருட கால இடைவெளிகளில் நடந்ததால் ஒன்றுக்கொன்றை தொடர்புபடுத்திக் கொள்ள யாரும் விழையவில்லை. ஆனால் ஒவ்வொரு மரணத்திலும் ஜோலிக்கு மட்டும் ஒரு உபகாரமும் காரணமும் இருந்திருக்கிறது. இந்த ஆறு மரணங்கள் (அ) கொலைகளை செய்த போது கூட ஜோலி பிடிபடவில்லை. ஆனால் அதற்கு ஒரு வருடம் கழித்து அவள் செய்த செயல் தான் அவள் மேல் சந்தேகம் வரவைத்து, விசாரணை, கைது என சென்று இப்போது சிறைக் கொட்டடியில் கொண்டு வந்து அவளை நிறுத்தியிருக்கிறது. அது என்ன? இன்னமும் ஜோலியின் வக்கீல் அவள் குற்றமற்றவள் என்று கூறுவதன் காரணங்கள் என்னென்ன? கல்லூரி படிப்பையே முடிக்காதவள் எப்படி NIT போன்ற பெரிய நிறுவனத்தில் லெக்சரராக பணிபுரிந்தாள்? அவளுக்கு சயனைட் எங்கிருந்து கிடைத்தது? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் இந்த  டாக்குமென்ட்ரியில் இருக்கின்றன.

போலீசார் ஜோலியைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போது எந்த பயமும் சலனமும் இல்லாமல் இயல்பாக அவர்களுடன் நடந்து செல்வார். ஒருவேளை இந்த கைதை அவர் முதல் தடவையே எதிர்பார்த்திருந்திருப்பார். அது நடக்காமல் போனதால் தானே அடுத்த ஐந்து மரணங்களும் நிகழந்தன. ஒவ்வொரு முறையும் இதை எதிர்பார்த்திருப்பார் தானே. கடைசியாக அது நடந்தேறிய போது அமைதியாக எதிர்கொள்கிறார் என்றதை எடுத்துக் கொள்ளலாம். இன்னொன்று. இத்தனை அபாண்டங்களையும் செய்துவிட்டு ஒருவரால் குற்றஉணர்ச்சி இல்லாமல் இருக்க முடியுமா? முடியும். முதல் குற்றம் இழைக்கும் போது இருந்த குற்றஉணர்ச்சியும் மனஉளைச்சலும் இரண்டாவதில் பாதியாகிப் போகும். மற்றுமொருமுறை, மீண்டுமொருமுறை என அது தொடரும் போது இயல்பான காரியமாய் மாறிப்போகும். அதற்காக யாரும் பார்க்கவில்லை, யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதாலேயே நாம் செய்யும் குற்றங்கள் நியாயமாகிவிடாது. பிரபல ஆங்கில எழுத்தாளரான C.S.Lewis தன்னுடைய ஒரு புத்தகத்தில் இப்படி எழுதியிருப்பார். “Integrity is doing the right thing even when no one is watching” என்பதாக. ஜோலி மட்டுமல்ல. நாமெல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் அதைச் செய்பவர்களாகத் தான் இருக்கிறோம். போலீஸ் இல்லையென்றால், சிசிடிவி இல்லையென்றால் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒன்வேயில் செல்வது கூட இந்த வகையில் சேரும்.

மொத்தத்தில், வெளிச்சத்தில் எல்லோரும் குழுமியிருக்கும் போது, எல்லார் கண்களும் தம்மேல் படும்போது உத்தமமாக இருக்கும் மனிதரும் அவர்தம் மனங்களும், யாரும் பார்க்காத இருளில் எவ்வாறு செயல்படும் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறது இந்த ‘Curry and Cyanide” டாக்குமென்ட்ரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *