நாடாளுமன்ற வரலாற்றில் நடந்திராத வினோதம்
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தனி தெலங்கானா மாநிலம் உருவாவதற்காக 2014 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ஐக்கிய ஆந்திராவை ஆதரிக்கும் எம்.பி-கள் கடும் ரகளையில் ஈடுபட்டார்கள்; சபாநாயகர் மேஜையில் இருந்த மசோதாவைப் பறிக்க முயன்றார்கள்; பேனர்களைத் தூக்கிப் பிடித்து அமளியில் ஈடுபட்டார்கள்; மிளகு பொடி வீசப்பட்டது; மைக்குகள் உடைக்கப்பட்டன. நாடாளுமன்ற வரலாற்றிலேயே அதுவரை நடந்திராத அமளி அன்றைக்கு நடந்தது.
இப்போது மோடி ஆட்சியில் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் புகுந்து மேசைகளில் குதித்து, வண்ணப்புகை பீச்சி அடித்தார்கள். நாடாளுமன்ற வளாகத்தின் வெளியிலும் இருவர் புகை பீச்சும் கருவிகளுடன் கோஷமிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-கள் இரு அவைகளிலும் குரல் எழுப்பினார்கள். ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாகக் கூறி கூட்டத்தொடர் முழுக்க 143 எம்.பி-கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் எம்.பிக்கள்.
மன்மோகன் சிங் ஆட்சியில் மிளகாய்ப் பொடி வீச்சு விவகாரத்தில் அன்றைய சபாநாயகர் மீராகுமார் உரிமைக்குழு விசாரணைக்குத்தான் உத்தரவிட்டார். இன்றைக்கு 143 எம்.பி-கள் இடைநீக்கம் என்பது இந்திய நாடாளுமன்றம் இதுவரை காணாத வினோதம்.
~ பராகத் அலி மூத்த பத்திரிகையாளர்